பதிவு செய்த நாள்
10
பிப்
2023
11:02
நாகர்கோவில்: மண்டைக்காடு கொடைவிழாவை ஒட்டி நடைபெறும் ஹிந்து சமய மாநாட்டுக்கு, இந்த ஆண்டு தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், பெண்களின் சபரிமலை எனப்படும், பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், பெண்கள் இரு முடி கட்டு ஏந்தி வந்து, கடலில் குளித்து பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.இங்கு, மாசி கொடை விழா பத்து நாட்கள் நடைபெறும். கடந்த 1980ல் கடலில் குளிக்க செல்வதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., நேரடியாக வந்து சமாதான கமிட்டி அமைத்து அமைதி ஏற்படுத்தினார்.இந்நிலையில், கொடை விழாவின் போது கடற்கரை செல்லும் ரோட்டில் வியாபாரிகளிடம் சர்ச் நிர்வாகம் குத்தகை வசூலிப்பதாக புகார் எழுந்தது.
மண்டைக்காடு ஊராட்சி நிர்வாகம், சர்ச் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. பத்மனாபபுரம் சப் - கலெக்டர் கவுஷிக் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், பல ஆண்டுகளாக, ஹிந்து சேவா சங்கம் நடத்தி வரும் ஹிந்து சமய மாநாட்டை, இந்த ஆண்டு முதல் நடத்தக்கூடாது என, தேவசம்போர்டு சார்பில் மண்டைக்காடு கோவில் மேலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரின் துாண்டுதல்: கலவரம் நடந்த ஆண்டு கூட, இந்த மாநாடு எந்த வித புகாருக்கும் இடமின்றி நடந்தது. இதுவரை நடந்த மாநாடுகளில் கேரள கம்யூ., அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டும் கேரளா, தெலுங்கானா மாநில கவர்னர்கள், மத்திய, கேரள அமைச்சர்கள் கலந்து கொள்ள இருந்தனர்.இந்நிலையில், தேவசம்போர்டு இதற்கு தடை விதித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநாட்டை தாங்களே நடத்த இருப்பதாக தேவசம் போர்டு கூறியுள்ளது.கோவில்கள் மூலம் பா.ஜ., வளர்கிறது என எண்ணி, குமரி மாவட்டத்தை சேர்ந்த தமிழக அமைச்சர் மனோ தங்கராஜின் துாண்டுதலில், தேவசம் போர்டு இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த விஷயத்தில், முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும் பக்தர்கள் விரும்புகின்றனர்.