பதிவு செய்த நாள்
11
பிப்
2023
10:02
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தில் நடந்த அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தில் செல்வ விநாயகர், முருகன், பூர்ணா புஷ்கலாம்பிகா உடனுறை அய்யனார், சப்த கன்னிகள், கருப்புசாமி, மதுரைவீரன், நாக கன்னி மற்றும் பரிவார தேவதைகளுக்கு கோவில் கட்டப்பட்டு, நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு பிப்.8ம் தேதி, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. மாலை முதற்கால யாக சாலை பூஜையும், 9ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை கோ பூஜை, அஸ்வ பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. மஹா பூர்ணாஹூதி, தீபராதனைக்குப்பின்னர் புனிதநீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோபுர உச்சிக்கு சென்றனர். 9.45மணிக்கு கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேக விழாவை கண்டு களித்தனர். திட்டக்குடி டி.எஸ்.பி.,காவ்யா தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.