பதிவு செய்த நாள்
11
பிப்
2023
10:02
வால்பாறை: வால்பாறை, உத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை அண்ணா நகர் உத்ரகாளியம்மன், செம்மூனீஸ்வரர், விநாயர், கருப்பசுவாமி,மதுரை வீரன் கோவிலின், 44ம் ஆண்டு திருவிழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அந்தியூர் பத்ரகாளியம்மன், சமத்துார் ஆஞ்சிநேயர், கவர்க்கல் காளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடம், அண்ணா நகர் முத்துமாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டது. நேற்று காலை, 11:00 மணிக்கு பக்தர்கள் தீர்த்த குடத்தினை ஊர்வலமாக எடுத்து, உத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்றனர். இரவு, 7:00 மணிக்கு நடுமலை ஆற்றில் இருந்து சக்தி கும்பம் எடுத்து, பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் கொண்டு சென்ற தீர்த்தத்தை கொண்டு சுவாமிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, 11ம் தேதி காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் தலைவர் மீனம்மாள், தர்மகர்த்தா செல்வநாயகி, பூசாரி பொன்னம்பலம் ஆகியோர் செய்து வருகின்றனர்.