பழநி: பழநியில் பருவதராஜகுல மகாஜன சார்பில் எடப்பாடி பக்தர்கள் மலைக்கோயிலில் தங்கி வழிபட உள்ளனர்.
பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு எடப்பாடி பருவதராஜகுல மகாஜன சமுதாயத்தினர் இன்று பழநி மலை கோவிலில் தங்க உள்ளனர். 365 ஆண்டுகளாக பழநி மலைக் கோயிலுக்கு சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து காவடி எடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு இன்று மலைக்கோயிலில் தங்க உள்ள நிலையில் அவர்களுக்கான பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்றது. 10 டன் அளவிலான மழை வாழைப்பழங்கள், 30 முதல் 50 கிலோ வரை எடையுள்ள 110 மூடை கரும்புச் சர்க்கரை, தேன், காவடியில் கொண்டுவரப்படும் பொருட்கள், நெய், கல்கண்டு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து 20 டன்னுக்கு மேல் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட உள்ளது. நேற்று மலைக்கோயிலில் பஞ்சாமிர்தம் கலந்து வைத்தனர். அதேபோல் பழநி அடிவாரம் பகுதியிலும் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று மலைக்கோயில் வரும் எடப்பாடி பக்தர்கள், பழநி ஆண்டவனுக்கு செலுத்தி, மலைக்கோயிலில் பூ கோலமிட்டு, படி பூஜை செய்து, பழநி ஆண்டவனை இன்று இரவு தங்கி வழிபட உள்ளனர்.