பதிவு செய்த நாள்
12
பிப்
2023
06:02
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில், ஐந்தாம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோவிலில் பிரமோத்ஸவ விழா இம்மாதம், பத்தாம் தேதி முதல், 16ம் தேதி வரை தொடர்ந்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாள் திருமஞ்சனம், அன்னகூட்ட உற்சவம், பிரம்மோத்ஸவ அங்குரார்பணம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு கொடியேற்றம், சேஷ வாகன புறப்பாடு, திருமஞ்சனம், சிம்ம வாகனம் புறப்பாடு, ஹம்ச வாகன புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 8:00 மணிக்கு சூரிய பிரபை வாகனம் புறப்பாடு, 10:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை, 4:00 மணிக்கு கருட வாகன புறப்பாடு, தொடர்ந்து அனுமந்த வாகன புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று யாளி வாகனம் புறப்பாடு, திருமஞ்சனம் நாச்சியார் திருக்கோலம், சந்திர பிரபை வாகனம் புறப்பாடு நடக்கிறது. செவ்வாய்க்கிழமை கற்பக விருட்ச வாகனம் புறப்பாடு, யானை வாகனம் புறப்பாடு, தொடர்ந்து திருத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. புதன்கிழமை குதிரை வாகனம் புறப்பாடு, கொடி இறக்கம், விடை சாத்துதல் உற்சவம் நடக்கிறது. வியாழக்கிழமை திருமஞ்சனம், தீர்த்தவாரி, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.