பதிவு செய்த நாள்
13
பிப்
2023
10:02
மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் குளக்கரை அருகே, பழமையான கங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புனரமைப்பு பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முடிந்து, இரண்டு நாட்களாக கோபூஜை, கணபதி லட்சுமி நவக்கிரக ஹோமம் நடத்தப்பட்டது. மங்கல இசையோடு, இரண்டு கால பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கலச புறப்பாடு நடைபெற்றது. கோவிலில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.
சிவன் கோவில்: அச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேடு கிராமத்தில், ராமகிருஷ்ண சுவாமிகள் மடாலயத்தில் உள்ள சிவன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, பிப்., 11ம் தேதி காலை, கோ பூஜை, தனபூஜை, நவகிரக பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் துவங்கி, இரண்டு நாட்கள் நடந்தன. நேற்று, யாக சாலையில் இருந்து குண்டங்கள் புறப்பட்டு, மடாலய கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன் பின், மூலவரான விநாயகர், சிவபெருமானுக்கும் சிறப்பு மஹா அபிஷேக புனித நீர் ஊற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர். இரவு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தது.