பதிவு செய்த நாள்
15
பிப்
2023
10:02
தொண்டாமுத்துார்: கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கவுள்ள மஹா சிவராத்திரி விழாவில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இசை கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை: ஈஷா மஹா சிவராத்திரி விழா, 25 ஆண்டுகளுக்கு மேலாக, மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவனுக்கு உகந்த இந்தராத்திரியில், அவருடைய நடராஜர் அம்சத்தை மக்கள் அனுபவப்பூர்வமாக உணர்வதற்காக, இவ்விழாவில் பல்வேறு விதமான இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. வரும், 18ம் தேதி மாலை, 6:00 மணி முதல் மறுநாள் காலை, 6:00 மணி வரை நடக்கும் மஹா சிவராத்திரி விழாவில், தமிழகம், கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப்புற கலைஞர் மாமே கான், இசையமைப்பாளரும், சித்தார் இசை கலைஞர்ருமான நிலாத்ரி குமார், பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்று, பக்தர்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்ள உள்ளனர். கேரளா தெய்யம், கர்நாடகா ஜனபாடா நடன கலைஞர்கள், ஜார்ஜியாவை சேர்ந்த நடன கலைஞர்கள், விழாவை ஆட்டம், பாட்டத்துடன்அதிர வைக்க உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.