பதிவு செய்த நாள்
15
பிப்
2023
05:02
பேரூர்: பேரூரில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் சார்பில், வரும், 18ம் தேதி, விடிய விடிய பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் மஹா சிவராத்திரி விழா நடக்கிறது.
தமிழக ஹிந்து அறநிலையத்துறை சார்பில், இந்தாண்டு மஹா சிவராத்திரி விழாவை, தமிழகத்தில் உள்ள மயிலை கபாலீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆகிய ஐந்து கோவில்களில், மஹா சிவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் சார்பில், வரும், 18ம் தேதி மாலை, 6:00 மணி முதல் 19ம் தேதி அதிகாலை, 6:00 மணி வரை, விடிய விடிய பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள், பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கிறது. இதில், வரும் 18ம் தேதி மாலை, 6:00 மணி 6:15 மணி வரை, நாதஸ்வரம் - தவில் மங்கள இசையும், 6:15 முதல் 6:30 மணி வரை திருமுறை விண்ணப்பமும் நடக்கிறது. மாலை, 6:30 மணி முதல் 7:00 மணி வரை, மஹா சிவராத்திரி துவக்க விழாவும், இரவு, 7:00 முதல் 7:15 வரை, பேரூராதீனம் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளின் அருளுரையும் நடக்கிறது.
தொடர்ந்து, இரவு, 7:15 முதல் 7:45 மணி வரை, பரதநாட்டிய நிகழ்ச்சியும், 7:45 முதல் 8:00 மணி வரை, கயிலை வாத்திய இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு, 8:00 மணி முதல் 9:30 மணி வரை, பக்தி நெறியை பெரிதும் வளர்ப்பவர்கள் பெண்களா, ஆண்களா என்ற தலைப்பில், பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் நடுவராக கலந்து கொள்ளும், ஆன்மிக பட்டிமன்றமும், இரவு, 9:30 மணிக்கு, பின்னணி பாடகர் கானா உலகநாதனின், பக்தி இசைக் கச்சேரியும் நடக்கிறது. தொடர்ச்சியாக, இரவு, 11:00 மணி முதல் 12:30 மணி வரை, கிராமிய இசை நிகழ்ச்சியும்; நள்ளிரவு, 12:30 முதல் 1:30 மணி வரை, நாட்டிய நாடகமும்; நள்ளிரவு, 1:30 மணி முதல் 2:30 மணி வரை, பக்தி இன்னிசையும்; அதிகாலை, 2:30 மணி முதல் 3:30 மணி வரை, கிராமிய இசை நிகழ்ச்சியும், அதிகாலை, 3:30 மணி முதல் காலை, 6:00 மணி வரை இசை சங்கமமும் நடக்கிறது. சிவராத்திரி விழாவையொட்டி, தமிழகத்தின் பல கோவில்கள் குறித்த அரங்குகளும் அமைக்கப்படுகிறது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, அறநிலையத்துறை சார்பில், ருத்ராட்சம் மற்றும் பிரசாதம் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.