பதிவு செய்த நாள்
18
பிப்
2023
09:02
நாகர்கோவில், சிவராத்திரி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று சிவாலய ஓட்டம் தொடங்கியது. இன்று இரவு இந்த ஓட்டம் நிறைவு பெறும். நாடு முழுவதும் கொண்டாடப்படும் சிவராத்திரி பண்டிகை குமரி மாவட்டத்தில் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. கல்குளம், விளவங்கோடு தாலுகாவில் அமைந்துள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடி சென்று வழிபடுகின்றனர். சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் நடைபெறும் இந்த ஓட்டம் முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து நேற்று மதியம் தொடங்கியது. கழுத்தில் மாலை அணிந்து, காவி உடை அணிந்த பக்தர்கள் கையில் விசிறியும், இடுப்பில் திருநீற்று பையுடனும் இந்த ஓட்டத்தில் கலந்து கொண்டனர். கோபாலா, கோவிந்தா என்ற கோஷத்துடன் ஓடும் பக்தர்கள் திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றியோடு ஆகிய கோயில்களில் வழிபட்ட பின்னர் திருநட்டாலம் கோயிலில் நிறைவு செய்கின்றனர். இங்கு சிவனும், விஷ்ணுவும் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகின்றனர். சுமார் 100 கி.மீ. சுற்றளவில் உள்ள இந்த கோயில்களை பக்தர்கள் துாக்கம் இல்லாமல் ஓடி சென்று வழிபட்டு இன்று மாலை முதல் திருநட்டாலத்தில் நிறைவு செய்வார்கள். இந்த கோயில்களை இணைத்து இன்று காலையில் மார்த்தாண்டத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒரு நபருக்கு 300 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.