பதிவு செய்த நாள்
18
பிப்
2023
05:02
பரமக்குடி: பரமக்குடி மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் மகா சிவராத்திரி விழா அனைத்து சிவன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் காவல் தெய்வம் கருப்பண சுவாமிக்கு 16 வது ஆண்டு சந்தன அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு வைகை ஆற்றில் இளநீர் காவடி, சந்தன குடம், பால்குடம், திருமாலிருஞ்சோலை நூபுர கங்கை தீர்த்த குடங்கள் பூஜை நடந்தது. தொடர்ந்து வீதிகளில் வலம் வந்து கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரம் தீபாராதனைகளுக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
*பரமக்குடி ஐ.டி.ஐ., எதிரில் உள்ள ஸ்ரீ ஞான யோகானந்த ஆசிரமத்தில் 12 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழாவில், ராஜகணபதி, திரிலிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.
*பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் மகா சிவராத்திரி விழாவில், நேற்று மாலை 6:00 மணி தொடங்கி அதிகாலை 5:00 மணி வரை என நான்கு கால யாக பூஜைகள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
*பரமக்குடி ஸ்ரீ குருநாத சுவாமி, வேலங்குடி கருப்பணசுவாமி பாரிவேட்டை விழாவையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு அபிஷேகம் நடந்து வெள்ளி கவசம் சாற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
*எமனேஸ்வரம் சித்தி விநாயகர் கோயிலில் 53 ஆம் ஆண்டு சிவராத்திரி இசை விழா நடந்தது.
தொடர்ந்து பிப்., 18 தொடங்கி மூன்று நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
*இதேபோல் ஈஸ்வரன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமனேஸ்வரமுடையவர், நயினார் கோவில் நாகநாத சுவாமி உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால யாக பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மேலும் பொதுமக்கள் தங்களது குலதெய்வ வழிபாடுகளை நடத்தினர்.