சதுரகிரியில் மஹா சிவராத்திரி வழிபாடு : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2023 09:02
ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மஹா சிவராத்திரி, சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று காலை 6:40 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 10:00 மணி வரை இதமான சூழல் இருந்த நிலையில் நேரம் செல்ல, செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால், மதியம் 3:00 மணியை கடந்தும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் மாலை 4:30 மணிக்கு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சனி பிரதோஷ பூஜைகளை பூஜாரிகள் செய்தனர்.
இரவு 7:00 மணி முதல் மஹா சிவராத்திரி வழிபாடு துவங்கியது. இரவு 8:00 மணி, நள்ளிரவு 12:00 மணி, 2:00 மற்றும் அதிகாலை 5:00 மணி வரை நான்கு கால சிவராத்திரி பூஜைகள் நடந்தன. வத்திராயிருப்பு, சாப்டூர் பகுதி போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடமாடும் மருத்துவ குழுவினர் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தனர். தாணிப்பாறையில் இருந்து மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் உட்பட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.