பதிவு செய்த நாள்
21
பிப்
2023
11:02
புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை பிறந்தநாள் முன்னிட்டு அவரின் சமாதி மற்றும் அவர் வசித்த அறைகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அன்னையின் 145 வது பிறந்த நாளையொட்டி, அவரது சமாதியை பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். மனித குல இனத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஆரோவில் சர்வதேச நகரத்தை உருவாக்கியவர் அன்னை. அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 1878ம் ஆண்டு, பிப்., 21ம் தேதி பிறந்தார். அன்னையின் இயற்பெயர் "மீரா அன்போன்ஸா இளம் வயதிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய அன்னை, அரவிந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கடந்த 1914ம் ஆண்டு, மார்ச் 29ம் தேதி, புதுச்சேரிக்கு வருகை புரிந்தார். உலக போர் காரணமாக, 1915ம் ஆண்டு, பிப்., 22ம் தேதி மீண்டும் பாரீசுக்குத் திரும்பினார். அன்னையின் பெரும் முயற்சியால் புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரம் ஆகியவை தோற்றுவிக்கப்பட்டது. 1973ம் ஆண்டு நவ., 17ம் தேதி, புதுச்சேரியில் அன்னை உயிர் நீத்தார். அவரது 145வது பிறந்த நாளையொட்டி, இன்று அதிகாலை அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை வசித்த அறைகள், பக்தர்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. மேலும் அவருடைய சமாதியும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செ#யப்பட்டிருந்தன. புதுச்சேரி, தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்து, அன்னையின் சமாதியில் வழிபாடு நடத்தி விட்டுச் சென்றனர்.