பதிவு செய்த நாள்
21
பிப்
2023
05:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் இலவச விடுதிகள் 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி மூடி கிடப்பதால், பக்தர்கள் கோயில் ரத வீதியில் ஓய்வெடுக்கும் அவல நிலை உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏழை குடும்ப பக்தர்கள் தனியார் விடுதியில் தங்கிட வசதி இன்றி கோயில் அலுவலகம், ரதவீதி, அக்னி தீர்த்தம் கடற்கரையில் அமர்ந்து சாப்பிட்டு, சிலர் அங்கே ஓய்வெடுத்தும், இளைப்பாறியும் சென்றனர். இதனை தவிர்க்க கோயில் நிர்வாகம் 2014ல் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ரூ. 1 கோடி செலவில் ஆண், பெண் பக்தர்களுக்கு தனித்தனியாக இலவச தங்கும் விடுதிகள் அமைத்தது. இங்கு 200 பக்தர்கள் தங்கும் அளவுக்கு இடவசதியும், குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் 100 வாகனங்கள் நிறுத்திட பார்க் வசதியும் உள்ளது. துவக்கத்தில் இங்கு பக்தர்கள் தங்கி பயனடைந்து வந்த நிலையில், 2020ல் கொரோனா தடையால் விடுதியை மூடினர்.
3 ஆண்டுகளாக மூடல் : 2022ல் கொரோனா பரவல் முடிந்த பின்பும், விடுதியை திறக்காமல் கடந்த 3 ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. இதனால் விடுதி பராமரிக்க, பாதுகாக்க கோயில் நிர்வாகம் கவனம் செலுத்தாமல் விட்டதால், இரவில் சமூக விரோதிகள் புகுந்து மது குடிக்கும் பார் ஆக மாற்றி உள்ளனர். மேலும் இங்குள்ள ஜன்னல், கதவுகள், கழிப்பறை குழாய்களை உடைத்தும், சேதப்படுத்தி அலங்கோலமாய் கிடக்கிறது. இதனால் பக்தர்கள் காணிக்கையில் உருவாக்கிய ரூ. 1 கோடி வீணாகி போனது.
ரத வீதியில் ஓய்வு : இதனால் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்ததும் பக்தர்கள் ஓரிடத்தில் அமர்ந்து சாப்பிட, ஓய்வு எடுத்து, இளைப்பாறி செல்ல இலவச விடுதி வசதி இல்லாமல் கோயில் அலுவலக வளாகம், இதன் முன்பும், ரத விதியில் அக்னி தீர்த்த கடற்கரையில் அமர்ந்து சாப்பிட்டு ஓய்வெடுக்கும் அவல நிலை இன்று வரை தொடர்கிறது. மூடி கிடக்கும் தங்கும் விடுதியை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஹிந்து அமைப்பினர் கோயில் அதிகாரியிடம் பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை.
வாகன வசதி : இந்த தங்கும் விடுதியை கோயில் நிர்வாகம் புதுப்பித்து பக்தர்கள் தங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் கோயிலில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் தங்கும் விடுதி உள்ளதால், இலவச வாகன வசதி ஏற்படுத்தினால், பக்தர்கள் பெரிதும் பயனடைவார்கள். வீணாகி போகும் அபாயத்தில் உள்ள ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கும் விடுதியை பாதுகாத்திட முடியும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.