பதிவு செய்த நாள்
23
பிப்
2023
04:02
சென்னை : திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், சென்னை, தி.நகரில் கட்டப்படும் பத்மாவதி தாயாருக்கான கோவில் கட்டுமானப் பணிகள், 90 சதவீதம் பூர்த்தியடைந்த நிலையில் கொடி மரப்பிரதிஷ்டை இன்று விமர்சையாக நடந்தது.
பழம்பெரும் நடிகை காஞ்சனா. இவருக்கு சொந்தமான ஆறு கிரவுண்டு இடம் தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் இருந்தது. அதனை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானமாக வழங்கினார். அந்த இடத்தில் பத்மாவதி தயாருக்கு கோவில் கட்டுவது என தேவஸ்தானம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. கடந்த,2020ம் ஆண்டு பிப்., மாதம் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூமி பூஜையை துவக்கி வைத்தார். தற்போது, 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வரும், மார்ச் மாதம், 17ம் தேதி சம்ரோக்ஷணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவில் துவஜஸ்தம்பம் எனும் கொடிமரப் பிரதிஷ்டை இன்று நடந்தது. இதனை முன்னிட்டு, ஆராதனை, புன்னியாகவாசனம், எந்திர பிரதிஷ்டை, பஞ்சாமிருத அபிஷேகம், யந்திர ஸ்தாபனம் நடந்தது. இதையடுத்து, கொடிமர பிரதிஷ்டை நடந்தது. இந்நிகழ்ச்சியில், திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக ஆலோசனைக்குழு தலைவர் சேகர், டி.டி.டி., இணை செயல் அலுவலர் வீரபிரம்மம், முதன்மை பொறியாளர் நாகேஷ்வரராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கோவில் அமைப்பு குறித்து டி.டி.டி., தமிழக ஆலோசனைக் குழு தலைவர் சேகர் கூறியதாவது: திருப்பதி அடுத்த திருச்சானுார் இருப்பது போன்று தி.நகரில் பத்மாவதி தாயார் கோவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இக்கோவில், மன்னர்கால முறையிலான கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. ஆறு கிரவுண்டு இடத்தில், மூன்று கிரவுண்டு கோவிலும், மீதமுள்ள இடத்தில் சிறிய புஷ்கரணி, மண்டபம், மடப்பள்ளி, சுவாமி வாகனங்கள் வைக்கும் இடம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. தற்போதுவரை, 90 சதவீத பணிகள் பூர்த்தியாகியுள்ளன. இதையடுத்து, கொடி மரப்பிரதிஷ்டை நடந்துள்ளது. மூலவர் பத்மாவதி தாயார் சிலை திருப்பதியில் வடிக்கப்பட்டு உள்ளது. விரைவில், தாயார் சிலை கோவிலுக்கு கொண்டு வருப்படும் மார்ச் மாதம்,17ம் தேதி கோவில் சம்ரோக்ஷணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.