பதிவு செய்த நாள்
24
பிப்
2023
08:02
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பெரியஓலைக்குடிபட்டி விநாயகர் கோயிலில் 1200 ஆண்டு பழமையான அர்த்தநாரீஸ்வரர், பெருமாள் சிற்பம் உள்ளிட்டவற்றை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். காரைக்குடி வரலாற்று ஆர்வலர் கருப்பையா, பாண்டிய நாடு பண்பாட்டு மைய ஆய்வாளர் ஸ்ரீதர், மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கல்லுாரி வரலாற்று பேராசிரியர் தாமரைக்கண்ணன் பெரிய ஓலைக்குடிபட்டியில் இந்த பழமையான சிற்பங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: இக்கிராமத்தில் ஆய்வு செய்த போது 1200 ஆண்டுகள் பழமையான, முற்கால பாண்டியர் கால சிற்பங்கள் இருப்பதை கண்டறிந்தோம். இங்குள்ள 108 லிங்க விநாயகர் கோயிலில் சப்தமாதர் தொகுப்பு, சண்டிகேஸ்வரர், சூரியன், யோக தட்சிணாமூர்த்தி, விநாயகர் சிற்பம், 12 ஆம் நுாற்றாண்டு கல்வெட்டு, 42 லிங்க தொகுப்பு உள்ளது. இவற்றின் நடுவே வட்டவடிவ ஆவுடையுடன் கூடிய ஒரு பெரிய லிங்கம், நந்தியும் சிதைந்து காணப்படுகின்றன.
சப்தமாதர் சிற்பம்: சப்தமாதர் சிற்பங்கள் முற்கால பாண்டியர்களுக்கு உரித்தான கலைநயத்துடன் நேர்த்தியான பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கியுள்ளனர். அவற்றில் முறையே வைஷ்ணவி, சாமுண்டி, இந்திராணி, கவுமாரி, பிராமி, மகேஸ்வரி, வாராஹி என்ற வரிசையில் இக்கோயிலில் இடப்பக்க வரிசையில் இடம் பெற செய்து வழிபட்டு வருகின்றனர். விநாயகர் மூலவராக உள்ளார். இச்சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. சண்டிகேஸ்வரர், யோகதட்சிணாமூர்த்தி, சூரியன் போன்ற சிற்பங்கள் விநாயகருக்கு வலதுபுற வரிசையில் காட்சி தருகின்றன. இச்சிலைகளுக்கு அருகே ஒரு லிங்க தொகுப்பு, 41 லிங்கங்களுக்கு நடுவே சற்றே பெரிய வட்டவடிவ ஆவுடையுடன் கூடிய ஒரு லிங்கம் காணப்படுகிறது. இந்த ஆவுடையின் அடிப்புற அமைப்பை பத்ம வடிவில் செதுக்கியுள்ளனர். சிதைந்த அர்த்தநாரீஸ்வரர், பெருமாள் :இங்கு சிதைந்த நிலையில் அர்த்தநாரீஸ்வரர், பெருமாள் சிலைகள் உள்ளன. இதற்கு எதிராக தலை உடைந்த நிலையில் பிற்கால சிற்பமும் இடம் பெற்றுள்ளது. இக்கோயிலில் முற்றிலும் சிதைந்த நிலையில் 3 தமிழ் வரிகள் கொண்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டின் 3 ம் வரியில் எழுதிகொ என்ற ஒரு சொல் மட்டுமே பொருள் அறிய முடிகிறது. இந்த எழுத்தை பார்க்கும் போது 11 அல்லது 12ம் நுாற்றாண்டு கால கல்வெட்டாக இருக்கலாம். இச்சிற்ப ஆதாரங்களை பார்க்கையில் பெரிய ஓலைக்குடிபட்டியில் பழமையான பெரிய சிவன், பெருமாள் கோயில் இருந்ததற்கான தடயம் உள்ளது. காலப்போக்கில் அந்நிய படையெடுப்பு அல்லது இயற்கை சீற்றத்தால் அழிந்திருக்க வேண்டும். எஞ்சிய சிற்பங்களை வைத்து இப்பகுதி மக்கள் கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர், என்றனர்.