பதிவு செய்த நாள்
01
மார்
2023
11:03
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா மார்ச் 5ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கி 14ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவில்,
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மதுரை ஆதீனம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் மாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமை திருவிழா நிறைவு பெறும் வகையில் 10 நாட்கள் விழா நடத்தப்படுகிறது. இந்த வருடத்திருவிழா மார்ச் 5ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி 14ம் தேதி வரை நடக்கிறது. கொடியேற்றம் அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவிலில் திருநடை திறக்கப்பட்டு 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30க்கு உஷ பூஜை , 7.30க்கு மேல் 8.30க்குள் கொடிஏற்றம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு கருமன்கூடல் தொழிலதிபர் கல்யாண சுந்தரத்தின் இல்லத்தில் இருந்து அம்மனுக்கு சீர் கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சகால பூஜை, தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. சமய மாநாடு விழாவை முன்னிட்டு ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 10 நாட்களும் சமய மாநாடு நடக்கிறது. மாநாடு நடத்துவது குறித்து எழுந்த பிரச்னைக்குபின் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடக்கும் 86வது இந்து சமய மாநாடு நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டு உள்ளது.
மாநாட்டு பந்தலில் காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஜனை, 8.30க்கு மாநாடு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து நடக்கும் சமயமாநாட்டை மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்து உரை யாற்றுகிறார். தெ லுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்துவிளக்குஏற்றுகிறார். நாகர்கோவில் மாதா அமிர்தானந்தமயி மட மாவட்ட பொறுப்பாளர் நிலகண்டாம்ருதசை தன்யா , வெ ள்ளிமலை ஆஸ்ரமத் தலைவர் சைதன்யானந்த மகராஜ் சுவாமிகள் மற்றும் குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா ஆசிவழங்குகின்றனர். அமைச்சர் சேகர்பாபு, மத்திய முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மாலை 6.30க்கு ஸ்ரீராஜ ராஜேஸ்வரி பூஜை , 9000 திருவிளக்கு பூஜை , இரவு 8 மணிக்கு பரதநாட்டியம் நடக்கிறது. இரண்டாம் நாள் காலை 6 மணிக்கு லலிதாசகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், 10 மணிக்கு பெரிய புராண விளக்கவுரை, பிற்பகல் 3 மணிக்கு பஜனை, இரவு 8.30க்கு நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.
வலியபடுக்கை பூஜை: ஆறாம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் வலிய படுக்கை பூஜை நடக்கிறது. ஏழாம் மற்றும் எட்டாம் நாள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சொற் பொழிவு போட்டி, ஏழாம் நாள் மாலை 4 மணிக்கு சங்க வருடாந்திர கூட்டம், 5 மணிக்கு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு மாதர் மாநாடு, இரவு 9 மணிக்கு அய்யாவழி கலை நிகழ்ச்சி நடக்கிறது. ஒன்பதாம் நாள் காலை 9 மணிக்கு சிவபுராண விளக்கவுரை, பிற்பகல் 3 மணிக்கு வில்லிசை, மாலை 6 மணிக்கு நடக்கும் சமய மாநாட்டில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நலஉதவிகள் வழங்கி பேசுகிறார். இரவு 9-.30க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், பெரியசக்கரதீவட்டி வீதி உலா நடக்கிறது. பத்தாம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் கோவிலுக்கு கொண்டு வருதல், 12.-30க்கு மேல் ஒரு மணிக்குள் ஒடுக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை ஆதரவுடன் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.