பதிவு செய்த நாள்
02
மார்
2023
09:03
பல்லடம்: பல்லடம் அருகே, மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா மஞ்சள் நீராடலுடன் நிறைவடைந்தது. பல்லடம் அடுத்த, கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கள்பாளையம் கிராமத்தில், விநாயகர், செல்வ மாகாளியம்மன், கருப்பராயன் மற்றும் கன்னிமார் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா நடந்தது. முன்னதாக, பிப்., 22 அன்று, விநாயகர் பூஜை, கலச பூஜை, 108 சங்கு பூஜை கேள்விகளுடன் பொங்கல் விழா துவங்கியது. தொடர்ந்து, பொட்டு சாமி பொங்கல் மற்றும் ஊர் சாந்தி ஆகியவை நடந்தன. கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்துவரப்பட்டு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. கருப்பராயன் கோவிலில் இருந்து அம்மை அழைத்தல், படைக்கலாம் எடுத்து வருதல், கும்பம் அலங்கரித்தல், மாவிளக்கு ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், இதையடுத்து, நேற்று காலை, மஞ்சள் நீராடல் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகளுடன் பொங்கல் விழா நிறைவு பெற்றது. சிறப்பு அலங்காரத்தில் செல்வ மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.