பதிவு செய்த நாள்
02
மார்
2023
09:03
திருச்செந்துார்: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று மாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, குடவருவாயில் தீபாராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். நாளை, சுவாமி சண்முகப்பெருமான் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி பெருந்திருவிழா கடந்தபிப்., 25ம் தேதி கொடியேற்றத்துடன்துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று 5ம் திருவிழாவை முன்னிட்டு, மேலக்கோயிலில் இரவு 7:30 மணிக்கு குடவருவாயில் தீபாரா தனைநிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியின் போது, மேலக்கோயிலில் சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினர். அதே நேரத்தில் பந்தல் மண்டபம் முகப்பில், சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருள, எதிர்சேவையாக இருபுறமும் தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.
நாளை 3ம் தேதி 7ம் திருவிழ ாவைமுன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு மேல் 5:30 மணிக்குள் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து, 8:45 மணிக்குள் சுவாமி சண்முகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் , பக்தபெருமக்களுக்கு வாழ்வில் வெற்றியையும், ஏற்றத்தையும் தரும் ஏற்றதரிசனம் அருளி பிள்ளையன் கட்டளை மண்டபத்தை வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் சுவாமி தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி, சிவன் அம்சத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 4ம் தேதி 8ம் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சத்தில் வீதி உலாவும் , நண்பகல் 11:30 மணிக்குள் பச்சைக் கடைசல் சப்பரத்தில், பச்சைசாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சத்திலும் எழுந்தருளி, வீதிஉலா வந்து அருள்பாலித்து கோயில் வந்து சேர்க்கையாகிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 6ம் தேதி நடக்கிறது. அன்று காலை7:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் மீன லக்கனத்தில் தேரோட்டம் துவங்குகிறது. 7ம் தேதி 11ம் திருவிழாவை முன்னிட்டு, இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணைஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் உட்பட கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.