பதிவு செய்த நாள்
04
மார்
2023
03:03
அன்னூர்: வடக்கலூர், பொங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
வடக்கலூரில் பழமையான பொங்காளியம்மன் கோவிலில் பழைய சன்னதிகளை புதுப்பித்து, கருங்கற்களால் மூன்று நிலை கோபுரம், மகா மண்டபம், பரிவார தெய்வங்களுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டு, பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 1ம் தேதி வேள்வி பூஜை உடன் துவங்கியது. கடந்த 2ம் தேதி காலையில், இரண்டாம் கால வேள்வி பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடந்தது. நேற்று காலை 8:15 மணிக்கு மூலஸ்தானத்திற்கும், கோபுரத்திற்கும் பரிவார தெய்வங்களுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. புலவர் திலகவதி சண்முகசுந்தரம், பேராசிரியர் முருகேசன் ஆகியோர் அம்மனின் பெருமை குறித்து ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினர். கூனம்பட்டி ஆதினத்தின் நடராஜ சுவாமிகள் அருளுரை வழங்கினார். அன்னூர், கோவை மற்றும் திருப்பூரைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.