பதிவு செய்த நாள்
06
மார்
2023
09:03
நாகர்கோவில், ஹிந்து சமய மாநாட்டில் கலந்து கொள்வது பெருமை,எப்போது அழைத்தாலும் வர தயாராக உள்ளதாக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா நேற்று காலை தொடங்கியது. காலை 8:00 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, மனேதங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி. ஹரிகிரண்பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த திருவிழாவில் ஹிந்து சமயமாநாடு நடத்துவதில் ஏற்பட்ட பிரச்னை பின்னர் பேசி முடிக்கப்பட்ட நிலையில் ைஹந்தவ ஹிந்து சேவாசங்கம் வழக்கம் போல் நடத்தியது. இதனை தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: ஹிந்து சமய மாநாட்டில் பங்கேற்பதில் பெருமைகொள்கிறேன். பிறப்பால் மனிதர் அனைவரும் ஒன்றே. அவரவர் விரும்புகின்ற மதங்களை அவரவர் சுதந்திரமாக வழிபடுவதற்கு எந்த நாட்டிலே அனுமதி இருக்கிறதோ, அந்த நாடுதான் உண்மையான சுதந்திரம் அடைந்ததாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரவர்கள் விரும்புகின்ற மத வழிபாடுகளில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப எந்தவித இடையூறும் இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு சுதந்திரமாக இருக்கிறது. , யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வார்த்தைக்கு இணங்க, இன்றைய தமிழக முதல்வர் அனைவரையும் ஒன்றாக நேசிப்பதால்தான் இது போன்ற மாநாடுகள் முழு சுதந்திரத்தோடு, எந்தவிதமான தடையும் இல்லாமல், பாகுபாடு இல்லாமல், வேற்றுமை இல்லாமல் அமைதியாக நடக்கிறது. அதற்கு இந்த ஆட்சி ஒருகாரணம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்ற முதல் அமைச்சர் என என்னை கூறினார்கள். நீங்கள் எப்போது அழைத்தாலும் நாங்கள் வருவதற்கும், உங்களோடு இருப்பதற்கும் என்றைக்கும் தயாராக இருக்கிறோம். உங்களை நாங்கள் வேறுபடுத்தி பார்ப்பதே கிடையாது. எங்களில் நீங்களும் ஒருவர். எங்கள் முதல்வரின் திராவிட மாடல் ஆட்சி அனைவருக்கும் உண்டான ஆட்சி. உங்கள் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பதுதன் எங்கள் முதல் வேலை. நீங்கள் எண்ணுவதெல்லாம் இந்த ஆட்சியில் நடைபெறும். உங்களுக்கு எதிர்ப்பான ஆட்சி இந்த ஆட்சி என எண்ண வேண்டாம். உங்க்ளோடு நாங்கள் இருப்போம். எங்களுடன் நீங்கள் இருங்கள். இந்த நிகழ்வு சிறப்பாக நடக்க எல்லாம் வல்ல இறைவனும் இந்த ஆட்சியும் துணையிருக்கும். இவ்வாறு அவர் பேசினார். கொடியேற்று முடிந்ததும், அமைச்சர் சேகர்பாபு வருவதற்கு முன்னர் குத்துவிளக்கேற்றி மாநாடு தொடங்கப்பட்டது. கவர்னர் தமிழிசை பேசி முடிக்கும் தருவாயில்தன் அமைச்சர் சேகர்பாபு மேடைக்கு வந்தார்.