பதிவு செய்த நாள்
14
செப்
2012
11:09
சென்னை : திருமலை திருப்பதியில், செப்., 18ம் தேதி துவங்கும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், கூடுதலாக, 25 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது. திருமலை திருப்பதியில், செப்., 18ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை, பிரம்மோற்சவம் நடக்கிறது. இதில், 18ம் தேதி துவஜாரோஹணம், 22ல் கருட சேவை, 23ல் தங்கத் தேரோட்டம், 25ல் ரதோத்சவம் ஆகியன நடக்கின்றன. இந்த பிரம்மோற்சவத்தில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருப்பதிக்கு செல்லும் அனைத்து ரயில்களின் முன்பதிவுகளும் முடிந்தன. அதே போல், தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து, திருப்பதிக்கு இயக்கப்படும், 38 பஸ்களின் முன்பதிவும், 90 சதவீதம் வரை முடிவடைந்துள்ளது. பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், செப்., 17 முதல், 27 வரை, திருப்பதிக்கு, கூடுதலாக, 25 சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சென்னையில் இருந்து ஏழு பஸ்களும், சேலத்திலிருந்து ஐந்து, திருச்சியிலிருந்து நான்கு, கோவையிலிருந்து மூன்று, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, கரூர், விழுப்புரம், வேலூர் ஆகிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இந்த சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு, தற்போது துவங்கி நடந்து வருகிறது.