பதிவு செய்த நாள்
14
செப்
2012
11:09
கடையநல்லூர் : பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் 10 லட்சம் ரூபாய் செலவிலான தங்கதேர் நிறுத்தும் இடத்திற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. அருணகிரிநாதரால் பாடல்பெற்று புகழ்பெற்று விளங்கும் திருக்குமர ஸ்தலங்களில் தென்மாவட்ட மக்களால் ஏழாம் படைவீடாக வழிபட்டு வரும் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோயிலில் தங்கதேர் செய்வதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. உபயதாரர்கள் மூலமாக தங்கதேர் அமைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் திருத்தேரை நிறுத்துவதற்கான பாதுகாப்பான வகையிலான கட்டடம் சுமார் 10 லட்ச ரூபாய் செலவில் திருமலைக்கோயிலில் கட்டப்படுகிறது. கோயில் வளாகத்தில் இந்த கட்டடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள், திருக்குமரனுக்கு விஷேச அலங்காரம், தீபாராதனை நடந்தது. பூமி பூஜை விழாவில் கோயில் உதவி ஆணையர் கார்த்திக், முன்னாள் திருப்பணிக்குழு மற்றும் அறங்காவலர் குழு தலைவரும், தங்கதேர் கமிட்டி தலைவருமான அருணாசலம், மாவட்ட அதிமுக துணை செயலாளர் மூர்த்தி, தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துப்பாண்டி, சங்கரபாண்டியன், செல்லப்பன், செங்கோட்டை நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, பண்பொழி டவுன் பஞ்., தலைவர் சங்கரசுப்பிரமணியன், பேரூர் செயலாளர் பரமசிவன், பேரவை செயலாளர் மாடசாமி, டவுன் பஞ்., துணைத் தலைவர் காஜாமைதீன், முன்னாள் செயலாளர் ஜின்னா, ராசா கன்ஸ்ட்ரக்சன்ஸ் பொது மேலாளர் ரவிராஜா, தென்காசி கிட்டுபிள்ளை, அறநிலையத்துறை உதவி பொறியாளர் திருநாகலிங்கம் மற்றும் பண்பொழி சமுதாய நாட்டாண்மைகள், கோயில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.