பதிவு செய்த நாள்
09
மார்
2023
08:03
காங்கேயம்: காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், ‘ஆண்டவன் உத்தரவு’ பெட்டியில், உலக உருண்டை உள்ளிட்ட, 4 பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ‘ஆண்டவன் உத்தரவு’ பெட்டி இக்கோவிலின் சிறப்பாக உள்ளது. சுப்பிரமணிய சுவாமியே பக்தர்களின் கனவில் தோன்றி, குறிப்பிட்ட பொருளை கூறி அதை, ‘ஆண்டவன் உத்தரவு’ பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். அந்த உத்தரவு பெற்ற பக்தர், கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை தெரிவிப்பார். அதன்பின் சுவாமியிடம் பூ வாக்கு கேட்டு, கனவில் வந்த பொருட்களை உத்தரவு பெட்டியில் வைத்து வழிபாடு செய்வர். அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை, அந்த பொருள் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும். இவ்வாறு உத்தரவான பொருள், ‘ஆண்டவன் உத்தரவு’ பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில், அந்த பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். கடந்த பிப்., 27 முதல் வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், முத்துார், வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் உத்தரவான, ‘அகிலம்’ என்ற உலக உருண்டை, ‘அத்திரி’ என்ற பசு, ‘அசுவம்’ என்ற குதிரை, இரண்டு திருமாங்கல்ய சரடு ஆகிய, நான்கு பொருட்களை, நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இது சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.