திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம் நிறைவு: அதிகரிக்கும் தீப வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2023 08:03
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உத்ஸவத்தில் நேற்று நடந்த தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. கடந்த ஆண்டுகளை விட அதிகமான பெண்கள் தீப வழிபாட்டில் பங்கேற்றனர்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் பிப்.26 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, இரவு நேரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. மார்ச் 6ல் வெண்ணெய்த்தாழி கண்ணன் கோலத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடந்தது. மறுநாள் பகல் மற்றும் இரவில் தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி வலம் வந்தார். நேற்று பதினொராம் திருநாளன்று காலை 6:25 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோயிலிலிருந்து சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வார் புறப்பாடாகி திருவீதி வலம் வந்தார். தொடர்ந்து தெப்ப மண்டபம் எழுந்தருளினார். பின்னர் காலை 10:30 மணி அளவில் சக்கரத்தாழ்வார் தெப்பப் படித்துறையில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்து பட்டாச்சார்யரால் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தெப்ப மண்டபத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி கோயிலுக்கு புறப்பாடாகி ஆஸ்தானம் எழுந்தருளினார்.
அதிகரிக்கும் தீப வழிபாடு: பதினொரு நாள் உத்ஸவத்தில் அனைத்து நாட்களிலும் தெப்பக்குளத்தை சுற்றி தீப வழிபாடு செய்தனர். காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக நடந்தது. வழக்கத்தை விட கடைசி 6 நாட்களில் அதிகமாக பெண்கள் தீபம் ஏற்றினர். தெப்பக்குளத்தைச் சுற்றிலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். தெப்ப மண்டபம் முன்பாக உள்ள கொட்டகையில் முழுமையாக பெண்கள் தீபம் ஏற்றினர். போலீசார் குளத்தின் அருகே கட்டுப்பாடு அறை, கண்காணிப்பு கோபுரம் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். தெப்பத்தன்று நெருக்கடியின் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.