சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2023 06:03
இடைப்பாடி: சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன் நிறைவேற்ற, ஏராளமான பக்தர்கள் தலையில், பூசாரி, தேங்காய் உடைத்தார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 28ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 17 நாளாக, மாரியம்மன் பல்வேறு அவதாரங்களில் தினமும் வீதி உலா நடந்தது. நேற்று மாரியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து கவுண்டம்பட்டியில் உள்ள சரபங்கா ஆற்றில் அலகு குத்திக்கொண்டு, ஊர் முழுதும் சுவாமி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் மாவிளக்கு தட்டுடன் பங்கேற்றனர். அப்போது, அந்த தட்டிலிருந்த தேங்காய்களை எடுத்து, பூசாரி, ஏராளமான பக்தர்களின் தலையில் உடைத்தார். குறிப்பாக கடந்த ஆண்டுகளில் வேண்டுதல் வைத்து நிறைவேறிய பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதில் ஒயிலாட்டம், மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. அதேபோல் வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.