பதிவு செய்த நாள்
11
மார்
2023
08:03
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று நள்ளிரவு வலியபடுக்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா கடந்த 5ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கி வரும் 14ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் ஆறாம் நாளான நேற்று நள்ளிரவு 1 மணிக்கு வலியபடுக்கை என்னும் மஹாபூஜை நடந்தது. மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு உஷபூஜை, மற்றும் இரவு 9.30க்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, மதியம் 12 மணிக்கு மதிய பூஜையை தொடர்ந்து பருத்திவிளை இந்து சமுதாய பேரவை சார்பிலும், உண்ணாமலைக்கடை பூதம்மன் கோவில் பக்தர்கள் சார்பிலும் சந்தனகுடம் பவனி மற்றும் பாளையத்தில் இருந்து செவ்வாடை பக்தர்கள் இருமுடி கட்டு ஏந்தி கோவிலுக்கு வந்தனர். மாலை 6.15க்கு தங்கரதம் வனி, 6.30க்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு குளச்சல் களிமார் பக்தர்கள் சார்பில் களப பவனி, 9 மணிக்கு அத்தாழ பூஜை, நள்ளிரவு 1 மணிக்கு வலியபடுக்கை என்னும் மஹா பூஜை நடந்தது. அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பொரி, அவல், கற்கண்டு, முந்திரி, பழ வகைகள், கரும்பு, இளநீர், தேங்காய், ங்குருப்பு, தினை, திரளி (கொழுக்கட்டை), வறுமாவு, உண்ணியப்பம், மண்டையப்பம், வடை வகைகள் போன்றவை அம்மன் முன் குவியலாக வைக்கப்பட்டு வலியபடுக்கை பூஜை நடந்தது. இப்பூஜையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏழாம் நாளான இன்று காலை 5 மணிக்கு அபிஷேகம், 6.30க்கு தீபாராதனை, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது.