பதிவு செய்த நாள்
14
செப்
2012
12:09
திருப்பூர்: திருப்பூர் கொங்கணகிரி கந்த பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் பணி இரண்டு ஆண்டுகளாக இழுபறியாகி வருகிறது.
திருப்பூர், காலேஜ் ரோடு கொங்கணகிரி மலையில், கந்த பெருமாள் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதோடு, கருவறை, முன்மண்டபம், விநாயகர் கோவில், நவக்கிரகங்கள் சன்னதி உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் நடந்தது. கடந்தாண்டு ஜூலை 10ல் கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பணிகள் துவங்குவதற்கு முன்பே, 64 அடிஉயரத்தில் ராஜகோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டது. கற்தூண்கள், சுவாமிகளின் சிற்பங்கள், பொம்மைகள் ஆகியவை கொண்டு சிறப்பாக அமைக்க வடிவமைக்கப்பட்டு பணிகள் துவங்கின. பாதி கோபுரம் உயர்ந்த நிலையில், பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன.இரண்டு ஆண்டுகளாகியும் கோபுர பணி இன்னும் துவங்காமல் உள்ளது. பாதியில் நிற்கும் ராஜகோபுரத்தால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதேபோல், மணி மண்டபம் கட்டும் பணியும் மெதுவாக நடந்து வருகிறது.இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "நன்கொடையாளர்கள் மூலம் ராஜகோபுரம் கட்டப்பட்டு வந்தது. நிதி பற்றாக்குறை காரணமாக, நிறுத்தியுள்ளனர். நிதி வசூலித்து ராஜகோபுரம் பணியை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.