பதிவு செய்த நாள்
11
மார்
2023
06:03
பல்லடம்: சித்தம்பலம் மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா, திருக்கல்யாண உற்சவத்துடன் நேற்று நிறைவடைந்தது.
பல்லடம் அடுத்த, சித்தம்பலம் கிராமம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா பிப்., 28 அன்று அம்மன் அபிஷேக ஆராதனையுடன் துவங்கியது. தொடர்ந்து, முனீஸ்வரன் பூஜை, கம்பம் சுற்றி ஆடுதல், வள்ளி கும்மியாட்டம், பரதநாட்டியம், பக்தி பாடல் இன்னிசை, அம்மன் மற்றும் கங்கணகாரர்களுக்கு காப்பு கட்டுதல், காவடி ஆட்டம் என, தினசரி பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மார்ச் 7 அன்று, உடுமலை திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாவிளக்கு அழைப்பு, சக்தி கரகம் எடுத்து வருதல், பூவோடு, முளைப்பாலிகை எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம், திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு, அம்மன் ஆலயம் வந்தடைந்ததும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து, நேற்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் திருவீதி உலா ஆகியவையும், தொடர்ந்து, கோவில் முன் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டு மறு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.