பதிவு செய்த நாள்
14
செப்
2012
12:09
தென்காசி : "புராதான சின்னங்களை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கி.பி. 6ம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய அரசர் கடுங்கோன் களப்பிரர்களை வென்று தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சியை மலர செய்தார். இக்கால கட்டத்தை முதலாம் பாண்டிய பேரரசு காலம் என்பர். பாண்டிய மன்னர்களின் வம்சா வழி வந்தவர்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டனர். இதில் முதலாம் ஜடாவர்ம குலசேகர பாண்டியன் (கி.பி.1190-1216) தமது தந்தை விக்கிரபாண்டியனை அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்றார். இவரது ஆட்சி காலத்தில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி அருகே உள்ள விந்தன்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை தம் குடியின் கீழ் கொண்டு வந்தார். அப்போது தான் தென்காசி அருகே உள்ள விந்தன்கோட்டை என்ற ஊரில் பாண்டிய மன்னன் வம்சா வழி வந்தவர்கள் கோட்டை அமைத்தனர். மேலும் ராணி நீராட நீச்சல் குளம் இரண்டு கட்டப்பட்டது. கோட்டையின் அருகே சுந்தரேஸ்வர பெருமாள் என்ற கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. பூஜை வழிபாட்டு முறைகளும் நடத்தி வரப்பட்டது. கோயிலை சுற்றி இருந்த கோட்டை, நீச்சல்குளம் ஆகியன தற்போது சுவர்கள் உடைந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. ன்னர் காலத்தில் கோயில்கள் மக்களது வாழ்வில் முக்கிய இடம் பெற்றன. அவை சமய நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாகவும், மக்கள் கூடிப் பேசும் இடமாகவும், அரசியல், பொது பிரச்னைகள் பேசி தீர்க்கும் அம்பலமாகவும் இருந்தன. மேலும் சமயப்பாடல்கள், இசை, நாடகம் போன்ற பல்வேறு கலைகளின் தொட்டிலாகவும் விளங்கின. பாண்டிய மன்னர்கள் தமிழ் சமுதாயத்திற்கும், தென்னிந்திய வரலாற்றுக்கும் ஏராளமான விலை மதிப்பற்ற அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளனர் என்றால் அது மிகையாகாது. எனவே மன்னர் கால புராதான சின்னங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாகும்.