பதிவு செய்த நாள்
15
செப்
2012
09:09
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்தேரோட்டம் செப்.,14ல் கோலாலகமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இங்கு, ஆவணித்திருவிழா, செப்.,5ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 10ம் நாளான நேற்று காலை 7.05 மணிக்கு துவங்கியது. முதலில் விநாயகர் தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதையடுத்து, வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய, சுவாமி குமரவிடங்கப்பெருமான் தேர் இழுக்கப்பட்டது. தெற்கு ரதவீதியில் வந்தபோது, தேரின் மேலிருந்த கும்ப கலசம் திடீரென சரிந்தது. இதனால், சிறிது நேரம் நிறுத்தப்பட்ட தேரோட்டம், கும்ப கலசத்தை சரிசெய்தவுடன் மீண்டும் துவங்கி, நான்கு ரதவீதிகளைச்சுற்றி நிலைசேர்ந்தது. மூன்றாவதாக, வள்ளி அம்பாள் தேர் இழுக்கப்பட்டது. தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.