பதிவு செய்த நாள்
17
மார்
2023
03:03
திருநின்றவூர்: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில், அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் உள்ளது. கடந்த 9ம் தேதி காலை கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக துவங்கியது. பெருமாள் அம்ச வாகனம், யாலி வாகனம், தங்க கேடயம் உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நான்காம் நாள் அதிகாலை 5:30 மணிக்கு, தங்க கருட சேவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அனுமந்த வாகனம் சேஷ வாகனம் சந்திர பிரபை நாச்சியார் திருக்கோலம் என, ஏழு தினங்களாக பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று ஸ்ரீதேவி பூதேவியுடன் தேரில் பெருமாள் எழுந்தருளினார். தேர் பவனி முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில், 1000 த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு, சாமியை பக்தர்கள் தரிசித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி, 150க்கும் மேற்பட்ட போலீசார், திருத்தேர் பவனி விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் மின் சேவை நிறுத்தப்பட்டு, தீயணைப்புத் துறையினர் மற்றும் அவசர 108 வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.