பதிவு செய்த நாள்
25
மார்
2023
09:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வணிகர் வீதி அருகில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, கடந்த ஜூன் 9ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
இக்கோவிலில், முதலாம் ஆண்டு வசந்த நவராத்திரி பெருவிழா, கடந்த 22ம் தேதி துவங்கியது. வரும் 31ம் தேதி வரை நடக்கும் விழாவில், தினமும் காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் உற்சவர் அம்மனுக்கு வெவ்வேறு விதமான அலங்காரமும் நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று மாலை, பூஞ்சோலை கன்னியம்மன் லலிதா சகஸ்ரநாம மண்டலி குழுவினரால், லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடந்தது. வரும் 31ம் தேதி ஊஞ்சல்சேவை உற்சவமும், காஞ்சி ஜெயஸ்ரீ நாட்டியாலயா பயிற்சிக்கூட மாணவியரின் பரதநாட்டியம் நிகழ்ச்சியும், ஏப்., 2ல், மூலவர் அம்மனுக்கு பஞ்சவர்ண காப்பு அலங்காரம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.