பதிவு செய்த நாள்
25
மார்
2023
05:03
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தஞ்சாக்கூரில் பிரம்ம சாஸ்தா சிற்பத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர் ஸ்ரீதர், பேராசிரியர் தாமரைக்கண்ணன் கூறியதாவது: புராணங்களின் படி பிரம்மா ஓம் என்ற பிரணவ மந்திரத்தை மறந்து விடுகிறார். முருகன் அவருக்கு குருவாக இருந்து பிரணவ பொருளை உபதேசித்த காரணத்தால் பிரம்ம சாஸ்தா என அழைக்கப்பட்டார். இப்பிரம்ம சாஸ்தா சிற்பங்கள் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் குமரிக்கோட்டம், ஆனுார், பாகசாலை, சிறுவாபுரி, விழுப்புரத்தில் தாதாபுரம், வேலுாரில் மேல்பாடியில் காணப்படுகின்றன. தென் தமிழகத்தில் அரிதாகத்தான் இச்சிற்பம் உள்ளது. தஞ்சாக்கூரில் கண்டறியப்பட்ட பிரம்ம சாஸ்தா சிற்பம் சற்று வித்தியாசமாக உள்ளது. 7 அடி உயரத்தில் பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கியுள்ளனர். தலையில் சிதைந்த நிலையில் கரண்ட மகுடம், மார்பில் வீரச்சங்கிலி, நான்கு கரங்களுடன் அழகாக காட்சி அளிக்கிறது. வேறு எந்தவித ஆயுதங்களும் செதுக்கப்படவில்லை. வலது முன் கரத்தில் பதாக ஹஸ்தமும், இடது முன் கரத்தில் ஹடிஹஸ்தமும் இடம் பெற்றுள்ளன. இந்த பதாக ஹஷ்தத்தை, பல்லவ ஹஸ்தம் என அழைக்கிறோம். இந்த சிற்பம் கட்டை விரலை மடக்கியவாறு அஸ்தம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. இந்த நான்கு விரல்கள் மூலம் உணர்ந்தும் செய்தி, வேதங்கள் நான்கையும் தன்னுள் அடக்கி வைத்துள்ளார் என்பது தான். மேலும் மற்றொரு முன்கரத்தில் ஹடிஹஸ்தமாக செதுக்கியுள்ளனர். பிற்காலத்தில் செதுக்கிய சிலைகளில் இது போன்ற ஹஸ்தங்கள் செதுக்குவது குறைந்துவிட்டன. இது வரை தமிழகத்தில் 7 அடி உயர பிரம்ம சாஸ்தா சிற்பம் வேறு எங்கும் கண்டறியவில்லை. சிற்பத்தின் வடிவமைப்பு முற்கால பாண்டியர்களின் கலையின் உச்ச நிலை என்பதை காட்டுகிறது, என்றனர்.