பதிவு செய்த நாள்
27
மார்
2023
09:03
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை விழா என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் அதிகாலை முதலே குவிந்தனர். சில பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும், பால்குடத்துடன் வந்து மூலவரை தரிசித்தனர். குறிப்பாக சென்னையில் உள்ள பக்தர்கள் நுாற்றுக்கணக்கானோர் அலகு குத்தியும், பால்குடம் மற்றும் மயில்காவடிகளுடன் வந்து மூலவரை வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். அதே போல, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். முன்னதாக, நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.