பதிவு செய்த நாள்
27
மார்
2023
04:03
கருமத்தம்பட்டி: எம்.பாப்பம்பட்டி கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட எம்.பாப்பம்பட்டியில் உள்ள ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில், பல நூறு ஆண்டுகள் பழமையானது. சுற்றுவட்டார கிராம மக்கள் எந்த ஒரு செயலை செய்யும் முன், அம்மன் சிரசில் பூ வைத்து வரம் கேட்பது வழக்கம். இக்கோவிலில், கல் வேலைப்பாடுகளுடன் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், விமானம் உள்ளிட்டவைகள் புதிதாக நிர்மாணிக்கும் திருப்பணிகள் நடந்தன. சுந்தர விநாயகர், ஸ்ரீ வள்ளி, தெய்வானை உடனமர் ஸ்ரீ சிவாஜல சுப்பிரமணிய சுவாமி, நவகிரகங்கள், பேச்சியம்மன், கருப்பராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டன. திருப்பணிகள் முடிந்து, 23 ம்தேதி இரவு, 8:00 மணிக்கு கிராம சாந்தி பூஜை நடந்தது..24ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 40 குண்டங்கள் அமைக்கப்பட்டு, நான்கு கால ஹோமங்கள் நடந்தன. இன்று காலை புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி மேளதாளத்துடன் எடுத்து வரப்பட்டன. காலை, 7:00 மணிக்கு ஸ்ரீ கரிய காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தச தானம், தரிசனம் மகா தீபாராதனை நடந்தது. விழாவில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.