பதிவு செய்த நாள்
28
மார்
2023
09:03
ஆழ்வார்திருநகரி: ஆழ்வார்திருநகரி, ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில், பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம் நடந்தது. துாத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணியின் கரையோரம் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும், 108 ணவ திவ்யசங்களில் சிறப்புற்ற நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. இதில் ஒன்பதாவது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி, ஆதிநாதர் ஆழ்வார்
கோயிலில் ஆண்டிற்கு நான்கு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. மாசி மற்றும் வைகாசி மாதத்தில் சுவாமி நம்மாழ்வாருக்கும், பங்குனி மற்றும் சித்திரை மாதத்தில் மூலவர் ஆதிநாதருக்கும் பிரம்மோற்சவ திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி , இந்தாண்டிற்கான பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம், நேற்று காலை நடந்தது. இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், காலைசந்தி நடந்தது. தொடர்ந்து, தாயார்கள் பொலிந்து நின்றபிரான் மற்றும் சுவாமி நம்மாழ்வார், தோளுக்கினியானில் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்திற்கு அருகில் எழுந்ருளினர். சன்னதி முன் அமைந்துள்ள கொடிமரத்திற்கு அர்ச்சகர்கள் புண்யாகவாசனம், கும்பபூஜை. அபிஷேகங்கள் நடத்தினர் . தொடர்ந்து , கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஆழ்வார்திருநகரி ஜீயர் சுவாமிகள், ஆச்சார்ய புருஷர்கள் கலந்து கொண்டு பிரபந்த பாராயணம் செய்தனர். பின்னர் தேர் கால் நடும் நிகழ்வு நடந்தது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து, வரும் 31ம்தேதி கருடவாகன சேவையும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 4ம் தேதி நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தில் தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் செயல்அலுவலர், அஜித், உபயதாரர்கள் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.