பதிவு செய்த நாள்
28
மார்
2023
01:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனை முன்னிட்டு இன்று காலை 10:20 மணிக்கு கொடிபட்டம் மாட வீதிகள், ரத வீதிகளில் சுற்றி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து பாலாஜி பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். பின்னர் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, முத்து பட்டர், அரையர் முகுந்தன், வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ், வெங்கடேசன், மணியம் கோபி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழா துவங்கியதை முன்னிட்டு தினமும் காலை 9:00 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னர் மண்டபம் எழுந்தருளும், இரவு 7:00 மணிக்குமேல் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடக்கிறது. ஏப்ரல் 1 இரவு கருட சேவை, ஏப்ரல் 5 அன்று காலை 7:20 மணிக்கு செப்பு தேரோட்டம், அன்றிரவு 7:00மணிக்குமேல் 8:00 மணிக்குள் ஆடிப்பூர கொட்டகையில் அமைக்கப்பட்ட பந்தலில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாணமும் நடக்கிறது. ஏப்ரல் 9 மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமைகுறடு மண்டபத்தில் புஷ்பயாகமும் நடக்கிறது.