மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராய மண்டபம் சீரமைப்பு பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 03:03
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் முற்றிலும் சேதமுற்ற வீரவசந்தராய மண்டபத்தை சீரமைக்கும் பணி நேற்று(மார்ச் 27) துவங்கியது. ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கோயிலில் 2018 பிப்.,2ல் இரவு கடை ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுவாமி சன்னதியில் அமைந்துள்ள வீரவசந்தராய மண்டபம் முற்றிலும் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து கோயில் கடைகள் அனைத்தும் பாதுகாப்பு கருதி நிரந்தரமாக அகற்றப்பட்டன. இம்மண்டபத்தை சீரமைக்க 2018 முதலே திட்டமிட்டப்பட்டது. கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகள் தாமதமானது.
இடைப்பட்ட காலத்தில் நாமக்கல் மாவட்டம் பட்டணம் கல்குவாரியில் இருந்து கற்கள் எடுக்க அரசு அனுமதி அளித்தது.நீண்ட இழுபறிக்கு பின் கடந்தாண்டு குவாரியில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு மதுரை கூடல் செங்குளம் கோயில் பண்ணையில் கல்துாண்கள், போதியல்கள், பீடம், சிம்ம பீடம், உத்தரம், இதர அழகியல் வேலைப்பாடுகளுடன் கற்களை செதுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணியை திருப்பூர் ஒப்பந்தக்காரர் ஸ்தபதி வேல்முருகன் செய்து வருகிறார். இப்பணிக்காக ரூ.18.10 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. மண்டபத்தில் 60 கல் துாண்கள் பொருத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக 4 துாண்கள் ஆயிரங்கால் மண்டபம் அருகே பொருத்தும் பணி நேற்று துவங்கியது. பூஜையில் தக்கார் கருமுத்து கண்ணன், மேயர் இந்திராணி பொன்வசந்த், கலெக்டர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பணியை ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தக்கார் தெரிவித்தார்.