பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 06:03
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது.
புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார். ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக "பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும் வளத்தையும் குறிக்கும் வகையில் "ஜய மங்களா என்றும் அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலில் பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இங்கு ராமநவமி உற்சவம் வாஸ்து சாந்தி பூஜையுடன் நேற்று மாலை துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை 7:00 மணி, மாலை 5:00 மணிக்கு ஜபம், நித்ய ஹோமம், மூலமந்திர ஹோமம், லட்சார்ச்சனை மற்றும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. வரும் 30ம் தேதி, ராமநவமி உற்சவம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 8:45 மணிக்கு பட்டாபிஷேகம், ராமச்சந்திர மூர்த்திக்கும், மூலவர் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கும் 2 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, கோவிலை வலம் வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. பின், சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது. அன்று மலை 4:30 மணிக்கு சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.