சரஸ்வதி அலங்காரத்தில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2023 10:03
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நடுநாட்டு திருப்பதி என பக்தர்களால் போற்றப்படும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும் நடைபெறும் பிரமோத்சவ விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3:00 மணிக்கு மூலவர் உலகளந்த பெருமாள் விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நித்திய பூஜை நடந்தது. 7:30 மணிக்கு ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. காலை 8:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தேகளீச பெருமாள் ஜீயர் மடத்திற்கு எழுந்தருளி திருவாய்மொழி, சேவை சாற்றுமறை, பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் பெருமாள் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8:00 மணிக்கு சரஸ்வதி அலங்காரத்தில் ஸ்ரீ தேகளீச பெருமாள் அம்ச வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி வான வேடிக்கையுடன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் ஏஜென்ட் கிருஷ்ணன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.