பதிவு செய்த நாள்
01
ஏப்
2023
06:04
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை ஒட்டி, பேரூர் பகுதியில், நாளை, (ஏப்ரல் 2ம் தேதி) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழா கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின், முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல், நாளை (ஏப்ரல் 2ம் தேதி) மாலை, 3.30 மணிக்கு நடக்கிறது. இதனையொட்டி, சிறுவாணி மெயின் ரோட்டில், நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூர் டி.எஸ்.பி., ராஜபாண்டியன் கூறுகையில்," பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை ஒட்டி, ஏப்ரல் 2ம் தேதி, பகல், 12:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காந்திபுரம், டவுன்ஹால் பகுதியில் இருந்து, மாதம்பட்டி, ஆலாந்துறை, பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், செல்வபுரம்,புட்டுவிக்கி ரோடு, சுண்டக்காமுத்தூர், ஆறுமுககவுண்டனூர் வழியாக பேரூர் செட்டிபாளையம் பிரிவு, சிறுவாணி மெயின் ரோட்டை அடைந்து செல்லலாம். அதேபோல, பூண்டி, ஆலாந்துறை, மாதம்பட்டி பகுதியில் இருந்து, சிறுவாணி மெயின் ரோடு வழியாக கோவை நகருக்குள் செல்லும் வாகனங்கள், பேரூர் செட்டிபாளையம் பிரிவு, ஆறுமுககவுண்டனூர், ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், புட்டுவிக்கி வழியாக நகருக்குள் செல்லலாம்,"என்றார்.