பதிவு செய்த நாள்
04
ஏப்
2023
09:04
ஒரு பணக்காரர் மிகப்பெரிய யாகம் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் யாகம் செய்யும் போது விலங்குகளைப் பலியிடுவது வழக்கம். யாகம் துவங்க இருந்த வேளையில், ஜைனமத ஸ்தாபகர் மகாவீரர் தன் சீடர்களுக்கு அகிம்சை குறித்து போதித்துக் கொண்டிருந்தார். மிருகங்களைத் துன்புறுத்துவதை அவர் கண்டித்தார். இந்த தகவல் வேத விற்பன்னர்களுக்கு தெரிய வந்தது. அவர்களின் தலைவர் இந்திரபூதி. அவர் பெரிய கல்விமான். ஆனால், ஆணவம் மிக்கவர். அவர் மகாவீரரைச் சந்தித்து, வேதங்கள் சொல்லியுள்ளபடியே தாங்கள் பலியிடுவதாக ஆதாரத்துடன் கூறினார். நீங்கள் சொல்வது தவறு. இறைவன் தன்னால் படைக்கப்பட்ட பிராணிகளை மனிதன் அழித்துக் கொள்ளலாம் என்று சொல்லவே மாட்டான், என்றார். அதற்கு இந்திரபூதி,சரி...இந்த உலகத்தையாவது கடவுள் தான் படைத்தார் என்பதை ஏற்கிறீர்களா? என்றார். அதையும் ஏற்கமாட்டேன். கடவுள் என்பவர் சர்வசக்தியுள்ளவர். அவர் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்துடன் மனிதர்களைப் படைப்பார் என்பதை நான் நம்ப மாட்டேன், என்றார் மகாவீரர். அப்படியானால், ஏழை, பணக்காரர், அழகன், அழகில்லாதவன் என்ற வேற்றுமையெல்லாம் எப்படி வந்தது? என திருப்பிக்கேட்டார் இந்திரபூதி. இதற்கு காரணம் மனிதன் செய்த முந்தைய வினையே! இறைவனின் படைப்பில் வித்தியாசம் கிடையாது. மனிதன் தான் செய்யும் வினைகளுக்கேற்பவே இத்தகைய பலன்களை அடைகிறான், என்று தெளிவாகச் சொன்னார். இதுகேட்ட வேத விற்பன்னர்கள் மகாவீரரின் காலடியில் விழுந்தனர். தங்களுக்கு நற்கருத்துக்களை போதிக்குமாறு வேண்டிக்கொண்டனர்.
வைத்தது யார் சொல்லு பாம்பே: பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், மகாவீரர் இதற்கெல்லாம் பயந்தவரல்ல. ஒருமுறை சண்ட கவுசிகன் என்ற நல்லபாம்பு அவரை நோக்கி வந்தது. மகாவீரர் அதைப் பார்த்தாலும் பயந்தோடவில்லை. சீறிய பாம்பு, அவரது கால் கட்டை விரலில் தீண்டி விட்டது. அப்போது மகாவீரர், பாம்பே! நீ பிறரை நேசிக்க வேண்டுமே தவிர, இவ்வாறு இம்சை செய்யக்கூடாது. நீ என்னைத் தீண்டிவிட்டாய் என்பதற்காக. நான் ஒன்றும் இறந்து விடமாட்டேன். உன் விஷம் என்னை ஒன்றும் செய்துவிடாது. இப்படி, நீ செய்யச்செய்ய உன் பாவக்கணக்கு தான் கூடும். பாம்பாய் பிறந்தாலும், உனக்கு தரப்பட்டிருக்கும் அறிவைக் கொண்டு ஆத்மாவைப் பற்றி சிந்தனை செய். உன்னைக் கண்டால் மக்கள் பயந்தோட வேண்டும் என்ற சிந்தனையை விட்டு விடு. நீ பிறரிடம் அன்பு செலுத்தினால், பிறரும் உன்னிடம் அன்பு செலு த்துவார்கள், என்றார். அந்த பாம்பு அங்கிருந்து ஓடி விட்டது.