அரவிந்தர் தங்கிய வீடு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2023 10:04
புதுச்சேரி: மகான் அரவிந்தர் 123ஆண்டுகளுக்குப் முன்பு புதுச்சேரிக்கு முதன் முதலாக வந்து தங்கி இருந்த வீட்டை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரால் கடுமையாக தேடப்பட்டு வந்த மகான் அரவிந்தர், பிரிட்டிஷாரின் கண்ணில் மண்ணை தூவி 1910ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கொல்கத்தா அருகில் உள்ள சந்திரநாகூரில் இருந்து ரகசியமாக கப்பல் மூலம் ப்ரெஞ்ச் ஆட்சி நடந்து கொண்டிருந்த புதுச்சேரிக்கு 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி புதுச்சேரி, வைசியாள் வீதியில் உள்ள வணிகர் சங்கர செட்டியார் என்பவரின் வீட்டில் வந்து தங்கினார். பிரிட்டிஷ் உளவாளிகள் இவரை தேடுவதை அறிந்த சங்கர செட்டியார் வீட்டின் பாதாள அறையில் மூன்று நாட்கள் அரவிந்தரை ரகசியமாக தங்க வைத்திருந்தார். இவரை நாள்தோறும் பாரதியார், சீனிவாச்சாரி ஐயங்கார் சந்தித்து பேசி வந்தனர். அதன் பின் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறைக்கு இடம் மாறிய அரவிந்தர்.ஆறு மாதங்களுக்கு பிறகு மிஷன் வீதி, சுய்ப்ரேன் வீதி, செயின்ட் லூயி வீதி, ஆகிய தெருக்களில் உள்ள வீடுகளில் தங்கியிருந்தார். அதன்பின் 1920 ஆம் ஆண்டு அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்து நிரந்தரமாக தங்கினார். இவர் முதல் முதலில் தங்கியிருந்த சங்கர செட்டியார் வீடு கசரத செட்டியார் என்பவருக்கு விற்கப்பட்டு இன்றுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. தசரத செட்டியார் குடும்பத்தினர் அரவிந்தர் தங்கி இருந்த அறையை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4ம் தேதி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். அதையொட்டி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.