பதிவு செய்த நாள்
06
ஏப்
2023
04:04
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், 5.20 கோடி ரூபாயில் லிப்ட் அமைக்கும் பணியையும் மற்றும் 3.51 கோடி ரூபாயில் மலைப்பாதையில் சாலை சீரமைக்கும் பணியையும், முதல்வர் ஸ்டாலின் காணொளிகாட்சி மூலம் துவக்கி வைத்தார்.
முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்திலிருந்து மலைக்கு மேல் உள்ள கார் பார்க்கிங் வரை வாகனத்தில் சென்று, அதன் பின் படிக்கட்டுகளை ஏறி மலை கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதனால், மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனையடுத்து, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலைக்கோவிலுக்கு செல்லும் வகையில் லிப்ட் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், கடந்த 2021ம் ஆண்டு, மருதமலையில், லிப்ட் அமைக்கும் பணிக்கு, பூமிபூஜை நடந்தது. அதன்பின், அப்பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது, மருதமலையில், 5.20 கோடி ரூபாய் மதிப்பில், லிப்ட் அமைக்கும் பணி மற்றும் அடிவாரத்தில் இருந்து, மலைக்கு செல்லும் மலைப்பாதையில், 3.51 கோடி ரூபாய் மதிப்பில், சாலை சீரமைப்பு பணியையும், சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளிகாட்சி மூலம் துவக்கி வைத்தார். இதற்காக, மருதமலையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கிரந்திகுமார், அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்சினி, எஸ்.பி., பத்ரிநாராயணன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லிப்ட் விவரம்: மருதமலை ராஜகோபுரத்தின் வலது பக்கத்தில், இரண்டு நிலைகளில், மேலே செல்வதற்கு இரண்டு லிப்ட். கீழே இறங்குவதற்கு இரண்டு லிப்ட் என, நான்கு லிப்ட் அமைய உள்ளது. ஒரு முறைக்கு, லிப்டில், 20 நபர்கள் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.