பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வழிமறிச்சான் கிராமத்தில் சோனியேந்தல் கண்மாயில் பழங்கால கோயில் கட்டுமானங்களில் இருந்த வியாழ வரி சிற்பம் மற்றும் வாமன அவதாரம் குறியீடு கல் ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இக்கண்மாய் பகுதியில் இரண்டரை அடி நீளமும், ஒரு அடி அகலமும் கொண்டதாக கோயிலின் கருவறையின் அதிட்டானப் பகுதியில் அல்லது மண்டபத்தின் அதிட்டான பகுதியில் இருக்கக்கூடிய வியாழ வரி எனும் யாழி சிற்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை தென்னக வரலாற்று மைய ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், சிவா, ராமர், ஹரிஹரன் உள்ளிட்டோர் கள ஆய்வு செய்து தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறிய போது: இங்கு கண்டெடுக்கப்பட்டது அதிட்டான பகுதியில் இருக்கும் சிறிய துண்டு கல் ஆகும். இதில் ஒருபுறம் மூன்று வியாழ வரி சிற்பமும், மறுபுறம் திருமாலின் வாமன அவதார குறியீடுகளான கமண்டலம், குடை, ஒரு குச்சியை பாம்பு சுற்றியது போல் கோட்டோவியம் உள்ளது. இப்பகுதியில் பாண்டியர்களின் பழமையான கோயில் இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் இயற்கை சீற்றங்கள் அல்லது அந்நிய படையெடுப்பால் கோயில் சிதைந்து இருக்கலாம். அதில் ஒரு துண்டுகள் தற்போது கிடைத்திருக்கிறது. மேலும் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டால் கோயில் கட்டுமானங்கள் இருப்பதை உறுதி செய்ய முடியும், என்றனர்.