சோழவந்தான்: சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீ மாயாண்டி கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா நடந்தது. இவ்விழா மார்.,28ல் செவ்வாய் சாட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து ஏப்.,4ல் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஏப்.,5ல் முளைப்பாரி அழைப்பு மற்றும் பொங்கல் வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாயாண்டி சுவாமிக்கு நிலைமாலை சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து நேற்று காலை கோயிலில் இருந்து சக்தி கரகம், முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து வைகையாற்றில் கரைத்தனர். இதையடுத்து முனியாண்டி, பகவதியம்மன், பட்டத்தரசி, சோணைச்சாமி, காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.