பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை காலை தீர்த்தவாரி நடைபெறும்.
பாண்டிய மன்னர்களிடமிருந்து சாசனம் பெற்று தற்போது நகரத்தார் கோயிலாக உள்ளது. எருக்காட்டூர் தச்சன் என்பவரால் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட குடவரைக்கோயில் ஆகும். தென்னகத்தில் 1600 ஆண்டு கால விநாயகர் வழிபாட்டுச் சிறப்புடையது. இங்கு அங்கு ச பாசமின்றி மோனநிலையில், ஞான தபத்தில், அர்த்த பத்ம ஆசனத்தில் மூலவர் விநாயகர் அருள்பாலிக்கிறார். வலது கரத்தில் சிவலிங்கத்துடன் லோக நலனுக்காக சிவபூஜையுடன் காட்சியளிக்கிறார். தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். நாளை அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. பூர்வாங்க பூஜைகள் முடிந்து சுவாமி தரிசனம் தொடங்குகிறது. பின்னர் காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். சிவனின் பிரதிநிதியாகிய அஸ்திரத்தேவருக்கும், விநாயகரின் பிரதிநிதியாகிய அங்குச்தேவருக்கும் தலைமை சிவாச்சார்யர் பிச்சைக் குருக்கள் தலைமையில் சிவாச்சார்யர்களால் தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் மூலவர் சொர்ண கவச அலங்காரத்தில் அருள்பாலிப்பார். உற்ஸவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் அருள்பாலிப்பார். இரவு 7:00 மணிக்கு மூலவர் சன்னதி முன்பாக, ராசிக்கட்டத்தின் கீழ் புதிய சோப கிருது ஆண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கப்படும். அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி எஸ்.தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சா.க.சுவாமிநாதன் செட்டியார் கூறுகையில், அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். முகக் கவசம் அணிந்து , தகுந்த இடைவெளியுடன் வரிசையில் பக்தர்கள் தரிசிக்க வேண்டுகிறோம். காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றனர்.