பதிவு செய்த நாள்
18
ஏப்
2023
03:04
ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலமாக நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஊட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருவிழா, கடந்த மாதம், 17ம் தேதி பூச்சொரிதல், 19ம் தேதி காப்புகட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. இம்மாதம், 17ம் தேதி காலை, 9:00 மணிமுதல், 10:00 மணிவரை தேர்முகூத்தக்கால் நடும் நிகழ்ச்சியும், பகல், 12:00 மணிக்கு, தேர் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய திருவிழா நாளான இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. கலெக்டர் அம்ரித், பகல், 1:55 மணிக்கு, தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார். அலங்கரிக்கப்பட்ட அம்மனின் தேர் பவனி, கோவிலில் இருந்து புறப்பட்டு, கமர்ஷியல் சாலை, லோயர் பஜார் சாலை மற்றும் மெயின் பஜார் மத்திய பஸ்நிலையம் வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. தேர் பவனியின் போது, பஜனை, ஆடல் பாடல் நிகழ்ச்சி இடம் பெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (19ம் தேதி) மஞ்சள் நீராட்டு மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 21ம் தேதி, விடையாற்றி உற்சவம் உள்பிரகாரத்தில் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.