Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » ஜட்ஜ் சுவாமி
ஜட்ஜ் சுவாமி- புதுக்கோட்டை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 செப்
2012
16:49

புதுக்கோட்டை மகான்-ஜட்ஜ் ஸ்வாமிகள். இவரது இயற்பெயர் இன்று வரை அறியப்படவில்லை.  இவரது தீட்சா நாமம்-ஸ்ரீஸத்குரு ஸதாசிவப்ருமேந்திர சரஸ்வத்யவ தூத ஸ்வாமிகள். எனினும். ஜட்ஜ் ஸ்வாமிகள்  ஜட்ஜ் ஸ்வாமிகள்...? ஆம்! ஒரு காலத்தில் நீதியதியாக இருந்து இல்லறத்தில் கோலோச்சியவர் இவர். பின்னாளில், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப ஸ்வாமியின் அருளால், துறவறத்துக்குத் துரத்தப்பட்டார். இனி, அவரது வரலாற்றைப் பார்ப்போம்.

ஜட்ஜ் ஸ்வாமிகள், ஆந்திர தேசத்தில் கோதாவரி நதிக்கரையில் தவளேஸ்வரம் என்னும் திருத்தலத்தில்  அவதரித்தார். புராதனமான சிவத் தலம் இங்கு உள்ளது. இறைவனின் திருநாமம் தவளேஸ்வரர். அற நெறி மற்றும் வேத நெறி தவறாமல் தவளேஸ்வரத்தில் வசித்த வேதமூர்த்தி சாஸ்திரிகள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் ஸ்வாமிகள். குழந்தை பிறந்தபோதே அதன் முகத்தில் திகழும் தெய்வ சொரூபத்தைக் கண்டு அனைவரும் வியந்தனர். பிற்காலத்தில் அவதூத (ஆடை இல்லாமல் இருக்கும் சாதுக்களை அவதூதர் என்பர்) மார்க்கத்தில் அனேக அதிசயங்கள் புரியப் போகிறவர் இவர் என்பதை அப்போது எவரும் அறியவில்லை.
வேதமூர்த்தி சாஸ்திரிகள், கலைகளில் தேர்ந்தவர் என்பதால் மகனையும் அப்படியே வளர்த்தார். தாய்மொழி தெலுங்கோடு, சமஸ்க்ருத மொழியறிவையும் அப்போது ஊட்டலானார். உரிய பருவத்தில் உபநயனம் செய்து வைத்தார். ஆரம்பப் படிப்புகள் முடிந்து, கல்லூரி காலத்தில் காலடி எடுத்து வைத்தார் ஜட்ஜ் ஸ்வாமிகள். வேத சாஸ்திரத்தில் சிறந்த விற்பன்னராக மகனை ஆக்க வேண்டும் என்று தந்தை ஆசைப்பட்டார். மகனோ, ஆங்கில அறிவையும் நன்கு வளர்த்துக் கொள்ளும் வண்ணம் மேற்படிப்பு படிக்க விழைந்தார்.

ஒரு நாள் தந்தை தனித்திருக்கும்போது அவரிடம் மெள்ளப் பேசலானார் மகன். உங்களது பெருமையையும் பெயரையும் சொல்லும் வகையில் வேத சாஸ்திரத்தில் நான் வித்தகன் ஆவேன். அதே நேரம் எனக்கு இருக்கும் ஆசையையும் புரிந்து கொள்ளுங்கள். இன்றைய தேதியில் ஆங்கில அறிவு பல பரிமாற்றங்களுக்குத் தேவையாக இருக்கிறது. எனவே, நான் சென்னைக்குச் சென்று கல்வியில் தேறி சட்டம் படிக்க விரும்புகிறேன் என்றார் ஸ்வாமிகள். மகனின் ஆசையும் நியாயமானதே என்பதை உணர்ந்த தந்தையும் குடும்பத்துடன் சென்னையில் திருவல்லிக்கேணிக்குக் குடி பெயர்ந்தார். மொழியறிவை வளர்த்துக் கொள்ள தமிழும் கற்றார் ஸ்வாமிகள். சென்னைக்கு வந்ததும் வேத நெறிகளைச் சற்றும் விடாமல். சாஸ்திர ஞானத்தை மேலும் மேலும் தேடிப் பெற்றார் ஸ்வாமிகள். சட்டம் முடித்து வழக்கறிஞராகத் தன்னை பதிவு செய்து கொண்டு நேர்மை-நியாயத்துடன் அந்தத் தொழிலைத் துவங்கினார் ஸ்வாமிகள் மகனுக்குத் திருமணப் பருவம் வந்து விட்டதே என்று எண்ணிய பெற்றோர். திருமகளை ஒத்த குணங்களைக் கொண்ட ஒரு நல்மகளைக் தங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இனி அவன் வாழ்க்கையை அவனே பார்த்துக் கொள்ளட்டும் என்று எண்ணிய வேதமூர்த்தி சாஸ்திரி தம்பதியர். எஞ்சிய நாட்களைக் கங்கைக் கரையில் கழிக்க விருப்பம் கொண்டு காசிக்கு ரயில் எறினர்.

நிதிக்காக வாழ்க்கையை நடத்தாமல். நீதிக்காகத் தொழில் புரிந்து ஸ்வாமிகள் பலரையும் வியக்க வைத்தார். சில நீதிபதிகளே இவரது வாதத் திறமை கண்டு வியந்தனர். கையில் காசு இல்லாமல் நீதி கேட்டு கோர்ட் படி ஏறும் அன்பர்கள். அதற்கு முன்னதாக ஸ்வாமிகளின் வீட்டுக் கதவைத் தட்டித் தங்களுக்காக வாதாடுமாறு வேண்டுவர். அவர்கள் கொடுத்ததை வாங்கிக் கொள்வர் ஸ்வாமிகள். இனிமையான இல்லறம் ஒரு குமரனைப் பெற்றுக் கொடுத்தது. இதை அடுத்து இன்னொரு திருக்குமாரனும் பிறந்தார். நாட்கள் போவதே தெரியாமல் இருப்பது வருடங்கள் சென்னையில் ஓடின. இவரின் பிறப்பும் வளர்ப்பும், நீதித் துறையிலேயே முடங்கிக் கிடப்பதன்று. இறைவனின் சித்தம் வேறாக இருந்தது. இறைவன் இவரை ஆட்கொள்ளும் வேளையும் வந்தது. ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமியை ஆட்சித் தலைவனாகக் கருதி ராஜ்யம் நடத்தி வந்தார் திருவிதாங்கூர் (இன்றைய திருவனந்தபுரம் ) மன்னர். தன் தேசத்தில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அமைச்சர்களிடம் விவாதிப்பதற்கு முன் அனந்தனிடம்தான் விவாதிப்பார் மன்னர். இவ்வளவு ஏன்? அனந்தன் ஆடை அலங்காரங்களுடன் திருவனந்தபுரம் வீதிகளில் வலம் வரும்போது அரச முத்திரை தாங்கி, கையில் வாளேந்தி மன்னர் முன் செல்வது வழக்கம் (இந்த வழக்கம் இன்றைக்கும் இருந்து வருகிறது). அத்தகைய ஆன்மிகச் சிறப்பு பெற்ற அந்த சமஸ்தானத்தின் உயர் நீதிமன்றத்துக்குத் தகுந்த நபர் ஒருவரைப் பிரதம நீதிபதியாகத் தேர்வு செய்யும் பொறுப்பு வந்தது. அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்து, யாரை இந்தப் பதவிக்கு தேர்வு செய்யலாம். மிகுந்த பொறுப்பு வாய்ந்த பதவி, சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்ளாமல், தர்மம்-நீதி இவற்றை எல்லாம் பின்பற்றி வரும் ஒருவரே இதற்குப் பொறுப்பானவர் என்பது என் கருத்து என்றார் மன்னர். கூடி இருந்தவர்கள் அனைவரும் அதை ஆமோதித்தனர். தகுந்த நபர் யார் என்பதற்கான விவாதம் தொடங்கியது. அப்போதுதான் சென்னையில் உத்தமமான வழக்கறிஞராக இருந்து வரும் ஸ்வாமிகளைப் பற்றிய விவரம், பொருத்தமான ஒரு நபர் மூலம் அங்கே எடுத்துரைக்கப்பட்டது.

அதே சமயம், நல்ல வருமானத்துடனும், சந்தோஷத்துடனும் இல்லறம் நடத்தி வருபவர் அவர், திடீரென அவரை இங்கே வரச் சொன்னால் சம்மதிப்பாரா என்பது சந்தேகம். தவிர, அங்கே அவர் சம்பாதிக்கும் வருமானத்தை நாம் இங்கே தர முடியாது. இறை இன்பத்தைப் பெரிய சொத்தாகக் கருதும் ஒருவர்தான், இங்கே வரத் துணிவார் என்று சொன்னார் ஒருவர். இதை அடுத்து மன்னர் யோசித்தார். பிறகு, சென்னையில் இருக்கும் வழக்கறிஞரைப் பற்றி நல்ல தகவல் சொல்கிறீர்கள்.... வருமானத்தை இழக்கத் துணிவாரா என்று கேள்வி எழுப்புகிறீர்கள். ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமியின் பிரசாதத்தோடு ஒரு பிரதிநிதியை சென்னைக்கு அனுப்புவோம். இங்கே வரச் சொல்லி அழைப்பு விடுக்கட்டும். மற்றதை அனந்தனே பார்த்துக் கொள்ளட்டும். என்றார் நம்பிக்கையாக.  தெய்வ பக்தியில் சிறந்த ஜட்ஜ் ஸ்வாமிகள். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து வரும் பிரதிநிதியை இன்முகத்தோடு வரவேற்றார். அனந்தனின் பிரசாதத்தைத் தானும் தரித்துக் கொண்டு, இல்லாளிடம் கொடுத்தார். பேச்சுவார்த்தை சுபமாக முடிந்தது. பணம் மட்டுமே வாழ்க்கை என்கிற கருத்து கொண்ட எவரும் அந்த நாளில் இப்படி ஒரு முடிவை எடுக்கத் துணிய மாட்டார்கள். ஸ்வாமிகளை அனந்தன் அழைக்கிறார்; இவர் புறப்படுகிறார். அவ்வளவே!

ஸ்வாமிகளின் திருமுகத்தைப் பார்த்ததும், மன்னர் பெரிதும் மகிழ்ந்தர். தன் தேசத்துக்கு ஒரு சிறந்த நீதிபதியை அனுப்பி வைத்த அனந்தனுக்கு நன்றி சொன்னார். ஸ்வாமிகளின் குடும்பத்துக்கு உரிய மரியாதை செய்து, அவர்கள் தங்குவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து தரச் சொன்னார். அரச முறை நெறிகளுக்கு உட்பட்டு சமஸ்தானத்தின் புதிய பிரதம நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ஸ்வாமிகள். வேத சாஸ்திரத்தில் தேர்ந்திருந்ததால், தன்னிடம் வரும் வழக்குகளை மிகுந்த தர்மத்துடன் ஆராய்ந்து இவர் தீர்ப்பு சொல்லும் தன்மை கண்டு மன்னர் வியந்தார். குடிமக்களும் இவரைப் போற்றினர். அங்கே வசித்த காலத்தில் மலையாளம் மற்றும் கன்னடத்தையும் கற்றுக் கொண்டார் ஜட்ஜ் ஸ்வாமிகள்.

ஆறு வருடங்கள் அமைதியாக ஓடின. ஸ்வாமிகளின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வண்ணம் ஒரு வழக்கு அப்போது நீதிமன்றத்துக்கு வந்தது. அது சாதாரண வழக்கல்ல. ஒரு கொலை வழக்கு. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பவனே கொலைக்காரன் என்பதை சாட்சியங்களும் வாதங்களும் உறுதி செய்தன. ஆனால், பிரதம நீதிபதியான ஸ்வாமிகளுக்கு உள்மனம் சொல்லிக் கொண்டிருந்தது.- இவன் கொலைகாரன் இல்லை என்று. சாட்சிகளையும் வாதங்களையும் வைத்துத்தானே நீதிபதி தீர்ப்பு கூற வேண்டும்? அதன்படி பார்த்தால், கூண்டில் நிற்கும் அவனுக்குத் தூக்கு தண்டனைதான் விதிக்க வேண்டும். இதுதான் சட்டம்.  ஆனால் அவனைத் தண்டிக்க ஸ்வாமிகளுக்கு ஏனோ மனம் வரவில்லை. தீர்ப்பை எழுத விரல்கள் ஓடவில்லை. விவாதங்கள் முடிந்ததும். தீர்ப்பை எழுத பேனாவை எடுப்பார். திடீரென நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்து விடுவார். நிதீமன்றம் கலைந்து விடும். இது ஒரு சில நாட்களுக்கு நடந்தது. ஒவ்வொரு தினமும் இரவு வேளையில் தான் தனித்திருக்கும்போது. எனக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்? இவனுக்குத் தண்டனை கூடாது என்று ஏன் என்னை அனந்தன் தடுக்கிறான்? என்று குழம்புவார். மறுநாளும் இதே தடுமாற்றம்தான் நீதிமன்றத்திலும் எதிரொலிக்கும்.

நிரபராதி இவன் என்று எனக்குத் தெரிந்தாலும், அதை சட்டபூர்வமாக நிரூபிக்க முடியாதவனாக இருக்கிறேன். தர்மப்படி விடுதலை செய்ய வேண்டிய ஒருவருக்கு, சாட்சியங்களை அடிப்படையாக வைத்து என்னால் எப்படி தண்டனை தர முடியும்? சட்டத்தை விட தர்மமே முக்கியம். எனவே, சட்டம் தந்த இந்தப் பதவி வேண்டாம். தர்மம்தான் நிலைக்கும் என்று தீர்மானித்து ஒரு நாள் பிரதம நீதிபதி இருக்கையில் இருந்து எழுந்து வெளியேறினார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பிரதம நீதிபதி பொசுக்கென வெளியேறியதைக் கண்டு நீதிமன்றம் திகைத்தது. விஷயம் கேள்விப்பட்ட மன்னர் அதிர்ந்தார். ஏதோ ஒரு ஞானம் இவருக்குள் சுழன்று சுற்றி அடிக்க.. வீட்டுக்குக்கூடப் போகாமல் கால் போன போக்கில் நடந்தார். மனைவி மக்களைத் துறந்தார். பதவியையும் செல்வத்தையும் மறந்தார். நகரத்தை விடுத்துக் கானகத்துள் புகுந்தார். தன் படைகளை ஏவி, இவரை அழைத்து வருமாறு உத்தரவிட்டார் மன்னர். படைகளை நாலா திக்கிலும் தேடினர். மனைவியும் மக்களும் புலம்பினர்.

எதை எவருக்கு எப்போது விதிக்க வேண்டும் என்று இறைவன்  தீர்மானிக்கிறானோ. அது அப்போதுதான் வாய்க்கும். ஸ்வாமிகள் பல கலைகளைக் கற்ற பின், ஞானம் பெற வேண்டும் என்பது இறைவனின் சித்தம். அது அதன் கிரமப்படிதானே நடக்கும்?

கட்டிய உடை..... கையில் காசு இல்லை. அரசுப் பொறுப்பில் ஒப்பற்ற பதவி வகித்து, சகல மரியாதைகளோடும் நடத்தப்பட்ட ஒருவர், காடு-மலைகளில் கால் தேய நடந்தார். தனக்கு ஞானம் நல்கும் தக்க குருவைத் தேடினார். வாழ்வில் அவரது தேடல் அத்தியாயம் இங்கேதான் ஆரம்பமாயிற்று.

கிடைத்ததை உண்டார். தரையில் படுத்தார். செல்லும் வழியில் இவரது திருமுகத்தைப் பார்த்துப் பலரும் உணவிட்டனர். உணவே இல்லாத வேளையில் உபவாசம் இருந்தார். திருக்கோயில்களைத் தரிசித்தார். சமாதிகளில் தியானம் புரிந்தார்.

கண்ணியமான நிதீபதியாக இருந்து எத்தனையோ உத்தரவுகளைப் பிறப்பித்த இவருக்கு. அகிலத்துக்கே நீதிபதியான இறைவனிடம் இருந்து உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சி ஆகிய திருத்தலங்களுக்குச் சென்றார். காஞ்சியில் காமாட்சியையும், ஸ்ரீவரதராஜ பெருமாளையும் தரிசித்தார். ஆதிசங்கரரின் பீடம் சென்று அவரது திருப்பாதம் பணிந்தர். காஞ்சிபுரத்தில் உபநிஷத மடத்துக்குப் போனார். அதன் தலைவராக இருந்த ஸ்வாமிகள், ஜட்ஜ் ஸ்வாமிகளைக் கண்டார். நீ எதிர்பார்ப்பது விரைவில் கிடைக்கும் என்று அருளினார். ஜட்ஜ் ஸ்வாமிகள் முகம் மலர்ந்தார். அங்கிருந்து காளஹஸ்திக்கு யாத்திரை துவங்கியது.

காளஹஸ்தியில் சிவாலயத்துக்கு அருகே ஒரு தவச் சாலையில் ஸ்ரீராமகிருஷ்ண அவதூத மகராஜைத் தரிசித்தார். ஸ்வாமிகளுக்கு ஞானத்தை வழங்குவதற்கென்றே இந்த அவதூத மகராஜ் இறைவனால் பணிக்கப்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. ஒரு வாரம் அந்த தவச் சாலையின் வாயிலில் யாசகம் கேட்கும் பாவனையில் காத்திருந்தார் ஸ்வாமிகள். அதுவரை மவுன விரதம் காத்து வந்த அவதூத மகராஜ் குடிலில் இருந்து வெளியே வந்து ஞானக் குழந்தையாகக் காத்திருக்கும் ஸ்வாமிகளைக் கண்டார். உச்சி முகர்ந்து, உபதேச மந்திரம் அருளினார். இன்று முதல் அவதூத ஆசிரமம் ஏற்று சதாசிவ பிரம்மேந்திரர் என்கிற தீட்சா நாமம் பெற்று நெரூரில் அருள் பெறு என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.

அதுவரை கைவசம் உடுத்தி இருந்த ஒற்றை ஆடையையும் துறந்து அவதூதர் (நிர்வாணம்) ஆனார். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தேஜஸுடன் புறப்பட்டார் ஜட்ஜ் ஸ்வாமிகள். நெரூர் தரிசனத்துக்குப் பின் வடக்கே ரிஷிகேசம் புறப்பட்டார். எண்ணற்ற குகைகளில் சமாதி நிலையில் கூடினார். கடும் தவம் அவருக்குக் கைகூடியது. அங்கிருந்து தென்னகம் வந்தபோது மானாமதுரையில் கிருஷ்ணாமூர்த்தி என்கிற இளைஞனுக்குக் கடும் சோதனைகளுக்குப் பின்  தீட்சை வழங்கினார். இவரே ஜட்ஜ் ஸ்வாமிகளின் பிரதான சிஷ்யரான ஸ்வயம்பிரகாசர் என்று பின்னாளில் அறியப்பட்டார். ஜட்ஜ் ஸ்வாமிகளின் யாத்திரை தொடர்ந்தது. ஒரு முறை அடர்ந்த வனத்தில் தவம் இருந்தபோது இவரைக் கண்டு எள்ளி நகையாடிய அறிவிலிகள் சிலர், செத்த பாம்பை இவரது கழுத்தில் தொங்க விட்டுச் சென்றனர். ஒரு சில இடங்களில் அவதூதரான இவரைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினர். அனைத்தையும் துறந்துதானே இந்த நிலைக்கு வந்தார் ஸ்வாமிகள்? இதை எல்லாம் கண்டு வருத்தப்படுவதற்கும் கோபப்படுவதற்கும் அவர் மனித நிலையில் இல்லையே! அதையும் தாண்டி அல்லவா வாழ்ந்து வருகிறார்!

திருச்சியில் தாயுமான ஸ்வாமியின் கோயில் சென்று தரிசித்தபோதும்தான் தனக்கான அந்திமக் காலம் நெருங்குவதை உணர்ந்தார் ஸ்வாமிகள். அங்கிருந்து யாத்திரையாகப் புறப்பட்டார். புதுக்கோட்டையில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள நார்த்தாமலை சிவன்கோயிலில் அமர்ந்த யோகத்தில் ஆழ்ந்தார். நிர்விகல்ப சமாதியில் மூழ்கினார். பலரும் வந்து ஸ்வாமிகளின் இத்தகைய கோலத்தைத் தரிசித்துப் பலன் பெற்றார்கள். பிறகு, ஸ்வாமிகளை - அந்த சமாதி நிலை கலையாமல் அப்படியே புதுக்கோட்டைக்கு சிவிகையில் தூக்கி வந்தார்கள். புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையின் வடகரையில் இருந்த மடத்துக்கு ஊர்வலம் வந்தது. வேதகோஷம், வாத்திய முழக்கம்-இவை எல்லாம் எப்படிச் சேர்ந்தன என்று எவருக்கும் தெரியவில்லை ஊர்வலம் முடிந்து சிவிகை இறக்கி வைக்கப்பட்டதும், அதே நிர்விகல்ப சமாதியில் ஸ்வாமிகள் நிறைவு பெற்றார்.

ஒரு காலத்தில் வழக்கறிஞராக இருந்து, மாபெரும் நீதியரசராகத் திகழ்ந்தவர் புதுக்கோட்டையில் சமாதி ஆகி உள்ளார் என்கிற செய்தி பரவ.... புதுக்கேட்டை அரச குடும்பத்தவர்கள். பிரமுகர்கள் பொதுமக்கள் என்று பலரும் திரண்டனர். ஸ்வாமிகளின் திருவுடல் சிவிகையை அலங்கரிக்க... ஊரையே வலம் வந்து இங்கே அதிஷ்டானம் கண்டது. புதுக்கோட்டை புண்ணியம் பெற்ற புனித பூமி ஆயிற்று. காலப்போக்கில் இவரது அதிஷ்டானத்துக்கான வழிபாடு ஏனோ நின்று போனது. அது மட்டும் அல்லாமல் இப்படி ஒரு மகான் இருந்தார் என்பதையே புதுக்கோட்டை மக்கள் மறந்து போனார்கள். அப்போது சீடரின் முயற்சியால் மீண்டும் இது அடையாளம் காணப்பட்டது. சுவாமி ஓங்காரானந்தா ஸ்வாமிகளின் மேற்பார்வையில் இன்று இந்த ஜட்ஜ் ஸ்வாமிகள் அதிஷ்டானம் இருந்து வருகிறது. பிரமாண்டமாகக் காட்சி தரும் இந்த கோயிலுக்குள் நுழைந்ததும். நேரே அதிஷ்டானத்தில் தரிசனம் தருகிறார் ஜட்ஜ் ஸ்வாமிகள். அவரது திருமேனி சமாதி கொண்ட இடத்தில் ஒரு சிவலிங்கம். தவிர, ஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் காலத்தில் இந்த அதிஷ்டானம் மேலும் சிறப்புப் பெற்றது. ஸ்ரீமாதாபுவனேஸ்வரி, அஷ்டாதச புஜ மஹாலட்சுமி துர்கை, 18 சித்தர்கள், சதாசிவனின் விஸ்வரூபக் காட்சி, பஞ்சமுக ஆஞ்சநேயர், பஞ்சமுக ஹேரம்ப கணபதி, தட்சிண காளி ஐயப்பன் என்று இங்கு வழிபாட்டு விக்கிரகங்கள் ஏராளம். அதிஷ்டானத்தைத் தரிசிக்க வேண்டியும். மாதா புவனேஸ்வரியின் அருள் வேண்டியும் உள்ளூர் மட்டும் அல்லாமல் எண்ணற்றோர் இன்று புதுக்கோட்டையில் திரள்வது ஜட்ஜ் ஸ்வாமிகளின் தவ பலம் என்றே சொல்ல வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.