பதிவு செய்த நாள்
20
ஏப்
2023
11:04
சென்னை: சீர்காழியில் கிடைத்துள்ள தேவாரச் செப்பேடுகள், கி.பி., 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவையே என்று வரலாற்று அறிஞர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், தருமபுர ஆதீன நிர்வாகத்தின் கீழ் சட்டநாதர் கோயில் உள்ளது. சைவ சமயத்தின் முதல் குரவரான திருஞானசம்பந்தர், 3ம் வயதில் ஞானப்பால் அருந்திய சம்பவம் நடந்தது இந்தக் கோயிலில்தான்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சட்டநாதர் கோயிலில், 32 ஆண்டுகளுக்குப் பின், மே 24ல் மகா கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு திருப்பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த 16ல், கோவிலின் தென்மேற்கு மூலையில், யாகசாலை அமைப்பதற்காக பூமியைத் தோண்டிய போது, 23 செப்புத் திருமேனிகள், 412 செப்பேடுகள், 86 உடைந்த செப்பேடுகள் மற்றும் சேதமடைந்த பீடங்கள், பூஜைப் பொருட்கள் கிடைத்துள்ளன.
தேவாரச் செப்பேடுகள்: மூவர் பாடிய தேவாரப் பாடல்களை, ஓலைச் சுவடிகளிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் எழுதி வைத்த தகவல்கள், கல்வெட்டுகளில் உள்ளன. ஓலைச் சுவடிகளில், காலந்தோறும் பிரதி எடுத்து வந்ததால், 300 ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகள், அரசு மற்றும் தனியார் வசம் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கோயில்களில் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்ட தேவாரப் பாடல்கள், கோயில் புனரமைப்புப் பணிகளின் போது அழிக்கப்பட்டு விட்டன. செப்பேடுகளில் எழுதப்பட்ட தேவாரப் பாடல்களும் இதுவரை கிடைக்காமல் இருந்தன. இந்நிலையில், சீர்காழியில் தேவார செப்பேடுகள் கிடைத்திருக்கின்றன. இது, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சம்பவம்.
செப்பேடுகளில் இருப்பது என்ன?
சீர்காழி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை தொல்லியல் துறையினரும், இந்து சமய அறநிலையத் துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர். தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானத்தின் உத்தரவுப்படி, சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் மதுசூதனன் கலைச்செல்வன் அச்செப்பேடுகளை திங்கட்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது: செப்பேடுகளில் உள்ள எழுத்துக்கள் வடிவமைப்பைக் காணும்போது, இவை 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை என்பது உறுதியாகிறது. திருமுறை கண்ட புராணத்தில் கூறப்பட்டபடி, பண் முறையில் இந்தப் பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளன
திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் தேவாரப் பாடல்கள், செப்பேடுகளில் இடம் பெற்றுள்ளன
இரண்டரை அடி நீளம், 3 அங்குல அகலத்தில் ஒவ்வொரு செப்பேடும் உள்ளன
செப்பேட்டின் இரு பக்கங்களிலும் முழு நீளத்திற்குப் பாடல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன
செப்பேட்டின் இடது கைப்பக்கம், தலத்தின் பெயர், பண்ணின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன
ஒவ்வொரு பதிகத்தின் முடிவிலும் உ என எழுதி, அதையடுத்து திருச்சிற்றம்பலம் என்று குறிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அந்தப் பாடலின் எண், தமிழ் எண்ணாகக் குறிக்கப்பட்டுள்ளது
இன்று அச்சில் கிடைக்கும் தேவாரப் பாடல்களுக்கும், செப்பேட்டில் உள்ள பாடல்களுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. இவற்றை பாடபேதம் என்போம்
l முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (1070 - 1122) தளபதியாக இருந்த மணவிற்கூத்தன், நரலோக வீரன் என்று புகழ் பெற்ற காலிங்கராயன், மூவர் தேவாரப் பாடல்களைச் செப்பேடுகளில் எழுதி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் சரசுவதி பண்டாரம் எனப்படும் நுாலகத்தில் வைத்ததாக கல்வெட்டுகளில் உள்ளது
l இந்த செப்பேடுகளும் காலிங்கராயன் காலத்தைச் சேர்ந்தவையே என்று உறுதியாகக் கூற முடியும்
l படையெடுப்புக் காலகட்டத்தில், பாதுகாப்புக் காரணங்களுக்காக, செப்பேடுகளும், சிலைகளும், சீர்காழி கோயிலில் புதைக்கப்பட்டுள்ளன
l செப்பேடுகளை முழுமையாக ஆய்வு செய்ய தருமபுர ஆதீன குருமகா சந்நிதானம் உத்தரவிட்டுள்ளார். கும்பாபிேஷகத்திற்குப் பின், செப்பேடுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, ஆதீனத்தின் சார்பில், அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாக்க வேண்டும்: செப்பேடுகளின் காலம் குறித்து வரலாற்று ஆய்வாளரும் சோழர்கள் பற்றியும் கோயில்கள் பற்றியும் பல நுால்கள் எழுதியவருமான குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:செப்பேடுகளில் உள்ள க என்ற எழுத்தை வைத்துப் பார்க்கும்போது அவை 12 ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவையாகத் தான் இருக்க வேண்டும்.தமிழகத் தொல்லியல் துறை மூலம் செப்பேடுகள் வேதியியல் முறையில் சுத்தம் செய்யப்பட்டு பாடல்கள் உரிய பாடபேதங்களுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.திருவாரூர் அருகே கொரடாச்சேரி அருகே உள்ள திருவிடைவாசல் சிவன் கோயிலில், 1912ம் ஆண்டு கல்வெட்டில் திருஞானசம்பந்தரின் ஒரு பதிகமே கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதைப் படி எடுத்தனர். பின் அது, அச்சுப் புத்தகங்களிலும் சேர்க்கப்பட்டது.ஆனால், 1980ம் ஆண்டு அக்கோவிலில் நடந்த புனரமைப்புப் பணிகளின் போது, அந்தக் கல்வெட்டை அழித்து விட்டனர்.அதுபோல் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், இந்தச் செப்பேடுகள் சீர்காழிக் கோவிலிலேயே பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் பார்வையிடும்படி வைக்கப்பட வேண்டும். அதுதான், செப்பேடுகளின் வரலாற்றுத் தன்மைக்கும் பொருந்தக் கூடியதாகும்.இவ்வாறு அவர் கூறினார்.